பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்472

             33
தான்வளர் கதிரழற் றாங்கி நைதரு
கான்வளர் நிழற்கொடு வெவருங் காத்தென
வான்வளர் வாழ்வினை வகுப்ப நாதன்வந்
தூன்வளர் பாசறை யுவந்து நாடினான்.
 
தான் வளர் கதிர் அழல் தாங்கி நை தரு,
கான் வளர் நிழல் கொடு எவரும் காத்து என,
வான் வளர் வாழ்வினை வகுப்ப நாதன் வந்து,
ஊன் வளர் பாசறை உவந்து நாடினான்.

     வளரும் கதிரவன் வெப்பத்தைத் தான் தாங்கி நையும் மரம், மணம்
பெருகும் தன் நிழலைக் கொண்டு யாவரையும் காத்தல் போல, வானுலகில்
வளரும் பேரின்ப வாழ்வை மக்களுக்கெல்லாம் பகிர்ந்தளிக்கவென்று
ஆண்டவன் அவதரித்து வந்து, ஊனுடலில் பெருகி வளரும் துன்பங்களைத்
தானே மகிழ்வோடு தனக்குத் தேடிக்கொண்டான்.

               எசித்து சேர் படலம் முற்றும்

            ஆகப் படலம் 22க்குப் பாடல்கள் 2002.