பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்478

     வேலைப்போலக் குத்திட்டு நின்று, கழுதைக் காதுபோல் விரிந்து,
அடர்ந்த மயிரைக் கொண்ட செவிகளை உடையவன்: ஊனை நேரே
ஒழுகவிட்டு, உதடுகளில் பிணக்குவியலின் முடை நாறும் பிளந்த வாய்களை
உடையவன்; காடு போல் அடர்ந்து, தென்னை ஒலைக்கு நிகராகச்
சூலம்போல் நீண்ட சிவந்த தாடிகளை உடையவன்; ஒப்பற்ற மாசுகள்
அனைத்தும் தானே ஒருங்கு தரித்த குரங்கு முகங்கள் கொண்ட உருவம்
படைத்தவன்.

     குரக்கு முகம் - குரங்கு + முகம்.

                     8
விண்டிக் கிழந்த பழியுளத்தான் வியன்றிக் குடியேற்
                                    றருங்கதத்தான்
மண்டிக் குயிரைச் சிதைத்துண்ண வஞ்சம் விளைக்கு
                                    நெஞ்சகத்தா
னெண்டிக் கசைக்கு மாணையினா னிப்பார் நடுக்குஞ்
                                    சூலத்தான்
பண்டிற் போர்த்த வுருவெனவெம் பகுவாய்ப் பாந்தட்
                                    கேதனத்தான்.
 
விண் திக்கு இழந்த பழி உளத்தான்; வியன் தீக்குடி ஏற்று அருங்
                                     கதத்தான்;
மண் திக்கு உயிரைச் சிதைத்து உண்ண வஞ்சம் விளைக்கும்
                                     நெஞ்சகத்தான்;
எண் திக்கு அசைக்கும் ஆணையினான்; இப் பார் நடுக்கும் சூலத்தான்;
பண்டில் போர்த்த உரு என, வெம் பகு வாய்ப் பாந்தள் கேதனத்தான்.

     விண்ணுலக்கத்தைத் தான் இழந்துவிட்ட பழியை உளத்தில் பதியக்
கொண்டவன்; பெரிய நரக நெருப்பில் குடிகளைக் கொண்டு சேர்க்க நாடும்
அரிய சினம் உடையவன்; மண்ணுலகிலுள்ள மனித உயிர்களைச் சிதைத்து
உண்ணும் பொருட்டு வஞ்சகம் செய்யும் நெஞ்சம் படைத்தவன்; எட்டுத்
திசைகளையும் அசைக்கும் ஆணை உடையவன்; இம்மண்ணுலகை நடுங்கச்
செய்யும் சூலப் படை தாங்கியவன்; பண்டை நாளில் மனிதரை ஏய்க்கத்
தான் தாங்கிய உருவமெனப் போற்றி, கொடிய அகன்ற வாய் கொண்ட
பாம்பு உருவம் பொறித்த கொடியை உடையவன்.

     'திக்கு' முதலிரண்டடிகளிலும் ஆகு பெயராய் உலகத்தைக் குறிக்கும்.