பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்498

                43
நீரிறவழ் மொக்குளென நேர்பொருத கான்முன்
றேரிறவழ் சித்தியென வேறுவிளை சீற்றக்
காரிறவழ் மின்னலென நேர்கருதி நில்லாப்
பாரிறவழ் மன்னுயிர்க டம்பரிசி தன்றோ.
 
"நீரில் தவழ் மொக்குள் என, நேர் பொருத கால்முன்
தேரில் தவழ் சித்தி என, ஏறு திளை சீற்றக்
காரில் தவழ் மின்னல் என, நேர் கருதி நில்லா,
பாரில் தவழ் மன் உயிர்கள் தம் பரிசு, இது அன்றோ?

     "நீரின் மேல் தவழும் குமிழி போலவும் நேரே மோதிய காற்றின்
முன் தேரிற் பொருந்திய கொடி போலவும், இடிகளை மிகுதியாகக்
கொண்ட சீற்றம் மிக்க கருமேகத்தில் தவழும் மின்னல் போலவும்,
இம்மண்ணுலகில் நடமாடும் மனித உயிர்களின் இயற்கையும், நேர்மையே
கருதி நிலைகொள்ளாத இதுவே அன்றோ?

     'இது' என்றது, முன் வின்றான் கூறியதைக் கருதியது. அது மானிட
இயல்பாகக் கொள்ள, வின்றானின் திறமைக்கு அங்கு இடமில்லை என்பது
கருத்து.

               44
இப்பரிசி னாயிரம னத்தவரை யேய்த்து
மைப்பரிசி னெங்குடில மாயையடல் பொய்யா
பொய்ப்பரிசி னாமுலகு புக்கினிதி லாண்டோ
மப்பரிசி னிப்பொழுத மைப்பதரி தையா.
 
"இப் பரிசின் ஆயிர மனத்தவரை ஏய்த்து,
மைப் பரிசின் எம் குடில மாயை அடல் பொய்யா,
பொய்ப் பரிசின் நாம் உலகு புக்கு இனிது ஆண்டோம்;
 அப் பரிசின் இப் பொழுது அமைப்பது அரிது, ஐயா!

     "ஐயா, இம்முறையில் ஆயிரம் விதமாக மாறும் மனம் படைத்த
மனிதரை ஏய்த்து, மயக்கத் தன்மையால் நமது வஞ்சக மாயையின்
வலிமை கெடாமல், பொய்யான வழியில் நாம் மண்ணுலகில் புகுந்து
இதுவரைஇனிதாக ஆட்சி செலுத்தி வந்தோம்; இப்பொழுதும் அவ்விதத்தில்
அமைத்துக்கொள்வதென்பது அரிது.