|
| 45 |
நோமலிய
வந்தபல நூதனமு நோக்கில்
வீமலிய கன்றதலை மேதினியி லண்டா
தீமலியி ருட்செறியு மித்திசையி லாண்டு
நீமலிநின் வஞ்சனைநி கழ்த்தனல தென்றான். |
| |
"நோ மலிய வந்த
பல நூதனமும் நோக்கில்,
வீ மலி அகன்ற தலை மேதினியில் அண்டா,
தீ மலி இருள் செறியும் இத் திசையில் ஆண்டு,
நீ, மலி நின் வஞ்சனை நிகழ்த்தல் நலது" என்றான். |
"நமக்கு வருத்தம்
மிகுமாறு வந்து தோன்றியுள்ள பல
நூதனங்களையும் நோக்குவோமாயின், பூக்கள் நிறைந்த இடமகன்ற
மண்ணுலகில் இனிமேல் நீ அண்டாமல், தீ நிறைந்து இருள் செறியும்
நரகமாகிய இத்திசையில் மட்டும் ஆட்சி செலுத்தி, நீ, நிறைந்த உன்
வஞ்சனையை நிகழ்த்திக் கொண்டிருத்தலே நல்லது" என்றான்.
திரங்கரன்
- சத்தனாசு போர்
| 46 |
நாய்முகன
வின்றவைந கைத்திவனை நாளுங்
காய்முகனொ டுங்கஞறி நோக்கியக தத்தான்
போய்முகமு டன்றெரிபு கைந்தெழுவ திங்கட்
டேய்முகவெ யிற்றெதிர்தி ரங்கரனு ரைத்தான். |
| |
நாய் முகன் நவின்றவை
நகைத்து, இவனை நாளும்
காய் முகனொடும் கஞறி நோக்கிய கதத்தான்
போய், முகம் உடன்று, எரி புகைந்து எழுவ, திங்கள்
தேய் முக எயிற்று எதிர் திரங்கரன் உரைத்தான்: |
நாய் முகங் கொண்ட
சத்தனாசு கூறியவற்றைக் கேட்டு நகைத்து,
இவனை எந்நாளும் வெறுக்கும் முகத்தோடு கடுத்து நோக்கிய சினங்
கொண்டவனாய் நெருங்கிப்போய், முகம் மாறுபட்டு, நெருப்புப் புகைந்து
எழுவனவும், தேய் நிலையிலுள்ள திங்கள் போன்றனவுமாகிய பற்களோடு
எதிராக நின்று, திரங்கரன் என்னும் பேய் பின் வருமாறு கூறினான்:
'தேய்
முகத் திங்கள்' என மாற்றிக் கூட்டுக. தேய் திங்கள் - தேய்
பிறை.
|