பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்501

                49
அரங்கவுமி வற்கவன வற்கிவனெள் ளொத்த
தரங்கமென வோங்கிவிழி தத்துதழ றாக்கத்
திரங்கரனு டன்றுதிரு குஞ்சினமோ டார்ப்ப
வுரங்கடிது குத்தினனொ ருங்குடல்ப தைப்ப.
 
அரங்கவும், இவற்கு அவன், அவற்கு இவன்
                              எள் ஒத்த
தரங்கம் என ஓங்கி, விழி தத்து தழல் தாக்க,
திரங்கரன், உடன்று திருகும் சினமோடு ஆர்ப்ப
உரம் கடிது குத்தினன், ஒருங்கு உடல் பதைப்ப.

     மனத்தில் அழுந்துமாறு, இவனுக்கு அவனும், அவனுக்கு இவனும்
கூறிய இகழ்ச்சிகள் தம்முள் ஒத்திருந்தன. அதன்பின், திரங்கரன் கடல்
போலப் பொங்கி, தன் கண்களில் பெருகியோடும் நெருப்பே அலைவீச,
மாறுபட்டு முறுகும் சினத்தோடு முழங்கி, சத்தனாசின் உடல் ஒருங்கே
பதைக்குமாறு, அவன் மார்பில் கடுமையாகக் குத்தினான்.

                  50
பதைத்தவுடல் பத்திருத னைக்குமுயர் பாய்ந்தான்
றுதைத்தவரி தோர்ப்பவெதிர் துள்ளியிரு காலா
லுதைத்தனனு தைப்பவுரு மொப்பவ வனார்த்துப்
புதைத்தனவெ யிற்றிரிவ புண்புனல்க டித்தான்.
 
பதைத்த உடல் பத்து இரு தனைக்கும் உயர் பாய்ந்தான்;
துதைத்த அரி தோர்ப்ப எதிர் துள்ளி, இரு காலால்
உதைத்தனன். உதைப்ப, உரும் ஒப்ப அவன் ஆர்த்து,
புதைத்தன எயிற்று இரிவ புண் புனல் கடித்தான்.

     சத்தனாசு, பதைத்த தன் உடல் இருபது மடங்கிற்கும் உயர்வாக
மேலே எழும்பிப் பாய்ந்தான்; மொய்த்த சிங்கமும் தோற்குமாறு
திரங்கரனுக்கு எதிரே இறங்கி வந்து துள்ளி, தன் இரு கால்களாலும்
அவனை உதைத்தான். உதைக்கவே, அத்திரங்கரன், இடிபோல முழங்கி,
தான் சத்தனாசின் உடலில் அழுந்தப் புதைத்த பற்களால் உண்டான
புண்ணினின்று இரத்த வெள்ளம் புறப்படக் கடித்தான்.

     'புதைத்தன எயிற்றுப் புண் புனல் இரிவ கடித்தான்' என மாற்றுக.