பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்502

                51
கடித்தவுடல் செங்கறையின் மாரிநிறை கால
விடித்தவிரு காரெனவெ திர்த்திருவர் தம்மைத்
துடித்தெழவு டற்குவட ழற்றுறவி றுக்கிப்
பிடித்தனர்க டித்தனர்வி ழுத்தினர்பு ரண்டார்.
 
கடித்த உடல் செங் கறையின் மாரி நிறை கால,
இடித்த இரு கார் என எதிர்த்து இருவர், தம்மை
துடித்து எழ உடல் குவடு, அழல் துற, இறுக்கிப்
பிடித்தனர்; கடித்தனர்; விழுத்தினர்; புரண்டார்.

     திரங்கரன் கடித்த சத்தனாசின் உடல் இரத்த மழையை மிகுதியாகப் பொழியவே, இடியோடு கூடிய இரு கரு மேகங்கள் போல் இருவரும் எதிர்த்து, தம் உடலாகிய மலை துடித்துக் குதித்து எழ, நெருப்புச்சூழுமாறு தம்மை இறுக்கிப் பிடித்தனர்; மாறி மாறிக் கடித்தனர்; ஒருவரையொருவர் கீழே தள்ளினர்; இருவரும் கட்டிப் புரண்டனர்.

     'செங்கறை' ஒரு சொல்லாகக் குருதியைக் குறிக்கும். 'தம்மை இறுக்கி' எனக்கொண்டு கூட்டுக.

                     52
பிரண்டனர்சு ழன்றனர்பி ரிந்திலர்பி ரிந்தார்
திரண்டனர்தி ரிந்தனர்சி தைந்திலர்செ றிந்தார்
மிரண்டிலர்வெ திர்ந்திலர்மெ லிந்திலர்மு னைந்தா
ரிரண்டினல்வி சும்புமென மீண்டெதிரெ ழுந்தார்
 
பிரண்டனர் சுழன்றனர்; பிரிந்திலர் பிரிந்தார்;
திரண்டனர் திரிந்தனர்; சிதைந்திலர் செறிந்தார்;
மிரண்டிலர், வெதிர்ந்திலர், மெலிந்திலர் முனைந்தார்;
இரண்டு அனல் விசும்பும் என மீண்டு, எதிர் எழுந்தார்.

     கட்டிப் புரண்ட அவ்விருவரும் சுழன்றனர்; பிரியாதவர்
இடையிடையே பிரிந்தனர்; மீண்டும் கூடித்திரிந்தனர்; ஒருவர்க் கொருவர்
சிதையாதவராய் நெருங்கினர்; கலங்காதவராய், நடுங்காதவராய்,
மலியாதவராய் முனைந்து போரிட்டனர்; நெருப்பைக் கொண்ட இரண்டு
மேகங்கள் என்றும் சொல்லத் தக்கவாறு மீண்டும் போய், பின்னும்
எதிரெதிர் எழுந்து போரிட்டனர்.