பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்504

     அவை கொம் பொடிந்து விழுந்தது கண்டு மற்றப் பேய்கள்
நகைத்தன. பேய்க்கரசன், அவை சிரித்தன என்று கண்டு, மிகுதியாகச்
சினந்து நோக்கி, அங்கு விளைந்த போரைத் தன் கைச்சாடையால்
விலக்கினான். அப்பொழுது சத்தனாசு, அங்குக் குழுமிநின்ற பேய்கள்
அஞ்சுமாறு எண்ணற்ற இடிகள் போல் முழங்கி, தகுதி வாய்ந்த தன்
செயல்களைக் கொட்டுமாறு, இவ்விதம் சொல்லத் தொடங்கினான்.

     'ஆல்' அசைநிலை. தன் துன்ப மிகுதியால், பேய்கள் சிரித்தது
பேய்க்கரசனின் சினத்தைத் தூண்டியது.

                       55
வெலத்தொழி லெஞ்ச வஞ்சி விதவையி
                           னிளைத்தே னென்றான்
குலத்தொழில் வஞ்சம் பொங்கக் கூவிடைத்
                                தவனான் செய்த
வலத்தொழி லிருவர் கூற வலியனா ரென்பீ ரென்னச்
சலத்தொழி லரசன்மூரற் றந்துமீண் டவன்சொன் னானே.
 
"வெலத் தொழில் எஞ்ச, அஞ்சி, விதவையின்
                                   இளைத்தேன் என்றான்;
குலத்தொழில் வஞ்சம் பொங்க, கூவிடத்து அவன் நான் செய்த
வலத் தொழில் இருவர் கூற, வலியன் ஆர் என்பீர்" என்ன,
சலத் தொழில் அரசன் மூரல் தந்து, மீண்டு அவன் சொன்னானே :

     "வெல்லுதற்குரிய தொழில் திறம் குறையவே, நான் அஞ்சி
விதவையைக் காட்டிலும் இளைத்தவன் ஆனேனென்று திரங்கன்
சொன்னான்; பேய்க்குலத்துக்குரிய வஞ்சகம் மிஞ்சுமாறு, இவ்வுலகத்தில்
அவனும் நானும் செய்த வல்லபத் தொழிலை நாங்கள் இருவரும் எடுத்துக்
கூற, எங்களுள் வலியவன் யாரென்று நீங்களே சொல்லுங்கள்" என்றான்.
பொய்த்தொழிலை வளர்க்கும் பேயரசன் அது கேட்டுத் தன் இசைவுக்கு
அடையாளமாகப் புன்னகைக் காட்டினான். எனவே, சத்தனாசு மீண்டும்
சொல்லத் தொடங்கினான் :