பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்505

                   56
காசுலாங் கடலி னீரும் காருலாம் வரையுஞ் சூழ்ந்து
தேசுலாஞ் சிந்து கீறுந் தேயமே யெனக்குத் தந்தா
யாசுலாங் குடிலத் தங்கண் ணறிவற விருளை யுய்த்து
மாசுலாந் தேய மாக்கி வணக்கமே யுனக்குக்
                                கொண்டேன்.
 
"காசு உலாம் கடலின் நீரும் கார் உலாம் வரையும் சூழ்ந்து
தேசு உலாம் சிந்து கீறும் தேயமே எனக்குத் தந்தாய்;
ஆசு உலாம் குடிவந்து, அங்கண், அறிவு அற இருளை உய்த்து,
மாசு உலாம் தேயம் ஆக்கி, வணக்கமே உனக்குக் கொண்டேன்.

     "மணிகளைக் கொழித்து ஒதுக்கும் கடலின் நீரும் மேகம் உலாவும்
மலையும் எல்லையாகச் சூழ்ந்து, பொன்னைக் கொழித்து ஒதுக்கும் ஆறுகள்
கிழித்து ஓடும் ஒரு நாட்டை எனக்கென்று ஒதுக்கித் தந்தாய்; அங்கு, பாவம்
விளைவிக்கும் என் வஞ்சகச் செயலால், அறிவு கெடுமாறு அறியாமை
இருளைப் பரப்பி, அதனை மாசுபடிந்த ஒரு நாடாக மாற்றி, அந்நாட்டவர்
வணக்கத்தை உனக்கே உரிமையாகக் கொண்டேன்.

     'வணக்கம் உனக்கே கொண்டேன்' எனப் பிரித்துக் கூட்டுக.

                   57
ஏற்றிய தேவ ரெண்ணி லெண்ணுவர் கலங்கு வாரும்
போற்றிய தேவ ரொப்பப் புரிகுவர் புகர்கொள் வாரு
மாற்றிய தேவர் காதை யறைகுவர் வெள்கு வாருஞ்
சாற்றிய தேவர் பூண்ட தகவுளோர் தமைக்கொல் வாரும்.
 
"ஏற்றிய தேவர் எண்ணில், எண்ணுவர் கலங்கு வாரும்;
போற்றிய தேவர் ஒப்பப் புரிகுவர் புகர் கொள்வாரும்;
ஆற்றிய தேவர் காதை அறைகுவர் வெள்கு வாரும்;
சாற்றிய தேவர் பூண்ட தகவு உளோர்தமைக்கொல்வாரும்.

     "அந்நாட்டவர் வணங்கிய தேவரைக் கணக்கிடத் தொடங்கினால்,
எண்ணிக்கை செய்வோர் அடங்காது கலங்குவபர் ஆவர்; அவர்கள்
போற்றிய தேவர்களின் நடத்தைக்கு ஒப்பச் செயல் புரிபவர் பாவத்தையே
கொள்பவர் ஆவர்; செயலாற்றிய அத் தேவர்களின் கதையை எடுத்துக்