பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்511

"கூடு உடை மாக்கள், காமம் குணம் என நாடி, நாடும்
கேடு உடைக் காமம் மூடக் கெழுமிய தேவர் காமப்
பீடு உடையார் என்று உன்னல், பெரும் புகழ் பெற்ற
                               ஆண்மை
ஈடு உடைத் தொழில் என்பாயோ?" எனத் திரங்கரன்
                               முன் பாய்ந்தான்

     "உடலைக் கொண்டுள்ள மக்கள், காமத்தைக் குணமென்று தாமே
நாடுதலால், தாமே நாடும் கேடுள்ள காமம் மூடி நிறைந்து கிடந்த
தேவர்களைக் காமத்தில் பெருமை உடையோர் என்று கருதச் செய்தல்,
பெரும் புகழ் வாய்ந்த வல்லமைக்கு ஈடான செயலாகுமோ?" என்று கூறி,
திரங்கரன் சத்தனாசை நோக்கி முன்னே பாய்ந்து வந்தான்.

                     67
முகிற்கிழித் திடித்த வேற்றின் முகத்தழற் கதத்த வேகத்
துகிர்க்கிழிக் கணிச்சி காட்டி யுற்றவச் சவத்தைப் பாந்தட்
டுகிற்கிழிக் குணுக்கு வேந்தன் சுளித்ததிர்த் ததட்டிப் பாய்ந்த
சிகிக்கிழித் தடத்த கண்ணான் செப்பலும் விலக்கி னானே.
 
முகில் கிழித்து இடித்த ஏற்றின், முகத்து அழல் கதத்த வேகத்து
உகிர்க் கிழிக் கணிச்சி காட்டி உற்ற அச் சவத்தை, பாந்தள்
துகில் கிழிக் குணுக்கு வேந்தன், சுளித்து அதிர்த்து
                                       அதட்டி, பாய்ந்த
சிகிக் கிழித் தடத்த கண்ணான் செப்பலும் விலக்கினானே.

     மேகத்தைக் கிழித்துக் கொண்டு இடித்த இடியேறு போல, தன்
முகத்தில் நெருப்புப் புறப்படுமாறு சினந்த வேகத்தோடு, தன் கை
நகங்களைப் பிளவு கொண்ட மழுவாயுதமாகக் காட்டிச் சத்தனாசு மேல்
மோத வந்த அப் பேயை, பாம்பின் உருவம் தீட்டிய துணிக்கொடியை
உடைய பேய்க்கரசன், சினந்து முழங்கி அதட்டி, பாய்ந்து வந்த நெருப்புத்
துண்டம் போன்று பெரிய கண்களை உடைய அத்திரங்கரன் மேலே
பேசுவதையும் தடுத்து நிறுத்தினான்.