பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்515

"மீண்டு எழுந்து, நால் மதி முன் மேதியினில் போய், அங்கண்
மாண்டு எழுந்து வந்த நவம் மதித்து ஆய்ந்தே, அன்று இரவி
ஈண்டு எழுந்து, மும் மடங்காய் இலங்கி, நிசி இருள் அஃகி
ஆண்டு எழுந்து, வையம் எலாம் அழகு உறிக்
                                  கேழ்த்தது கண்டோம்.

     "விழுந்தபின் மீண்டும் எழுந்து நான்கு மாதங்களுக்குமுன்
மண்ணுலகிற்குப் போய், அங்கு மாண்புற்று எழுந்து வந்த புதுமை
என்னவென்று மதித்து ஆராய்ந்து, அந்நாளில் ஞாயிறு இங்கு நின்று
எழுந்து, மூன்று மடங்காய் ஒளிகொண்டு விளங்கி, இரவின் இருட்காலம்
குறைய அவ்வுலகில் எழுந்து, உலகமெல்லாம் அழகு கொண்டு
விளங்கியதைக் கண்டோம்.

     'மாண்டு' - 'மாண்' என்ற பகுதி கொண்டு அமைந்த இறந்தகால
வினையெச்சம். 'மாண்ட என் மனைவியொடு மக்களும் நிரம்பினர்'
(புறம். 191). என்ற இடத்துப்போல 'இறந்து' என்ற பொருள் படும் இடத்து,
'மாள்' என்பது பகுதியாம்.

                   73
தேன்வயிறார் மலர்பூத்த செழுஞ்சோலை பருவமில
கான்வயிறார் கனிநலமுங் கலந்தன்று களிப்பெய்தி
வான்வயிறார் சுவையமிர்தம் மண்ணுலகிற் றொக்கதென
மீன்வயிறா ருலகொப்ப மேதினியன் றெழக்கண்டோம்.
 
"தேன் வயிறு ஆர் மலர் பூத்த செழுஞ் சோலை, பருவம் இல,
கான் வயிறு ஆர் கனி நலமும் கலந்து, அன்று, களிப்பு எய்தி,
வான் வயிறு ஆர் சுவை அமிர்தம் மண் உலகில் தொக்கது என,
மீன் வயிறு ஆர் உலகு ஒப்ப, மேதினி, அன்று, எழக் கண்டோம்.

     "அந்நாளில், தேனைத் தன்னுள் நிறையக் கொண்ட மலர்கள் பூத்த
செழுமையான சோலைகள், அது கனி தோன்றும் பருவம் இல்லாதிருந்தும்,
மணத்தைத் தன்னுட் கொண்டு நிறைந்த கனிகளின் நலமும் கூடிக்
களிப்படையக் கண்டோம். அதனால், வானுலகில் நிறைந்துள்ள சுவையான