பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்516

அமிர்த வெள்ளம் மண்ணுலகில் வந்து திரண்டாற்போல, அந்நாளில்,
விண்மீன்களைத் தன்னுள் நிறையக்கொண்ட வானுலகம் போல,
மண்ணுலகம் எழுச்சி கொள்ளக் கண்டோம்,


                     74
அருள்காட்டி யவதரித்தா னாண்டகையோ வன்றென்றோந்
தெருள்காட்டிப் பெத்திலத்தோர் சிறுவனுதித் தனனென்றே
னிருள்காட்டி மல்கிரவி லொளித்தெய்தா னிறையென்றீர்
வெருள்காட்டி மீண்டிவையாய்ந் தம்மகன்வான் வேந்தென்றான்.
 
"'அருள் காட்டி அவதரித்தான், ஆண்டகையோ, அன்று,' என்றோம்.
'தெருள் காட்டிப் பெத்திலத்து ஒர் சிறுவன் உதித்தனன்' என்றேன்.
இருள் காட்டி மல்கு இரவில் ஒளித்து எய்தான் இறை' என்றீர்.
வெருள் காட்டி, மீண்டு இவை ஆய்ந்து, 'அம்மகன் வான் வேந்து'
                                             என்றான்.

     "ஆண்டவனோ அந்நாளில் தன் அருளைக் காட்டி அவதரித்து
வந்துள்ளானென்று நாமெல்லாம் ஐயம் கொண்டோம். நான், 'தெய்வ ஒளி
காட்டிப் பெத்தில் நகரில் ஒரு சிறுவன் பிறந்துள்ளான்' என்றான். நீங்களோ,
'ஆண்டவன் இருளை வெளியே காட்டி நிறைந்த இரவில் ஒளித்து
வரமாட்டான்' என்றீர்கள். அச்சம் கொண்டு, இவற்றை மீண்டும் நான்
ஆராய்ந்து பார்த்ததில் 'அம் மகனே வானுலக மன்னனாகிய ஆண்டவன்"'
என்று சத்தனாசு முடித்துக் கூறினான்.

                  சத்தனாசுக்கு மறுப்பு

                     75
நாய்முகத்து நின்றனபோய் நவின்றவை கேட் டகீதத்தன்
வீய்முகத்து வியப்பெய்தி விளம்பியதே திடமென்றான்
றீய்முகத்து நகைகாட்டிச் சீதாய்வு மறுத்துரைக்கும்
நோய்முகத்து விலங்குறையுண் ணுழைந்திறையோன்
                                     பிறப்பானோ.