பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்519

கலை புறங்கண்டு ஒளிர் ஞானம் கடந்துஇறையோன், கன்னித் தாய்க்கு
இலை புறம் கண்டு அலர் உயர்த்தோன் கணவன் என ஈந்தன கால்,
கொலை புறம் கண்டு இகல் குணுங்கிற்கு இவை ஒளிப்பக் குறித்தனனே
நிலை புறங்கண்டு ஆண்டகை, முன் நினைத்த பயன் இன்று உளது ஆல்.

     கலைகளையெல்லாம் வெற்றிகொண்டு ஒரும் ஞானத்தையும் கடந்து
நின்ற ஆண்டவன், இலைகளைப் புறத்தே தள்ளிவிட்டு மலர்க் கொடியைத்
தாங்கிய சூசையை அக்கன்னித் தாய்க்குக் கணவனெனத் தந்த நாளில்,
கொலையைப் புறத்தே தள்ளி வைத்துப் பகை கொண்டுள்ள பேய்களுக்கு
இவற்றை யெல்லாம் மறைத்து வைக்கக் கருதினான்; எந்நிலையையும் வெற்றி
கொண்ட ஆண்டவன், முன் நினைத்த பயன் இவ்வாறு இன்று நடை
பெறுவதாயிற்று.

     'ஆல்' அசை நிலை, "மரி என்பவள் புருடன் உள்ளவள் ஆகையில்,
கன்னியல்லள் என்று பசாசு எண்ணினதாகையால், அவள் ஈன்ற பிள்ளையும்
நாதன் அல்ல வென்று நிச்சயித்தமையால், ஆண்டவன் நினைத்த பயன்
கண்டது என்றான் என்க" என்பது பழையவுரை அடிக் குறிப்பு.

                 பேய்க்கரசன் சின மொழி

                    79
தேற்றாதோ ரரும்பொருளை யிருட்டறையுட் டேடுவர்போ
லாற்றாதோர் மந்திரத்தி னலகையின நிலைகாணா
மாற்றாதோர் வெருட்கடலை நீந்தறியா மருண்டலையப்
போற்றாதோர் துயர்விள்ளா புகைந்தரசன் புகலுற்றான்.
 
தேற்றாதோர் அரும் பொருளை இருட்டறையுள் தேடுவர் போல்,
ஆற்றாத ஓர் மந்திரத்தின் அலகை இனம் நிலை காணா,
மாற்றாத ஓர் வெருட் கடலை நீந்து அறியா மருண்டு அலைய,
போற்றாத ஓர் துயர் விள்ளா புகைந்து, அரசன், புகல் உற்றான்;