பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்521

"திடம் கொடு ஆர் புலன் தெளிந்த நாம் அறிகு இலா,
                                    மனு ஆய்த்
தடம் கொடு ஆண்டகை தரணியில் உதிப்பனோ? இதுவே
மடம் கொடு ஆயின வழுது என, வந்த நோய் மறுப்ப
இடம் கொடு ஆகுவது யாது என இயம்புதீர்" என்றான்.

     "உறுதி கொண்டு நிறைந்த அறிவால் தெளிவு கொண்டுள்ள நாம்
அறியாதபடி, ஆண்டவன் வழி பிடித்து மனிதனாய் உலகில் வந்து
பிறப்பானோ? இது அறியாமையால் எற்பட்ட பொய்மை என்று
கண்டுகொண்டு, நமக்கு வந்த துன்பத்தை நீக்குவதற்கு இடம் அறிந்து
செய்யத்தக்கது யாது என்று சொல்லுங்கள்" என்றான்.

                 விரகவாயுவு கூற்று

                 82
சிரக மாயிரு மருப்பிடை பைத்துயர் செயிர்த்த
வுரக மாடிய வுருக்கொடு மேழக முகத்தான்
நரக மாதிர நயப்புற விரகநோய் நல்கும்
விரக வாயுவு வெடிப்பநக் கியம்புதல் கொண்டான்.
 
சிரகமாய் இரு மருப்பு இடை பைத்து, உயர் செயிர்த்த
உரகம் ஆடிய உருக் கொடு, மேழக முகத்தான்,
நரக மாதிரம் நயப்புஉற விரக நோய் நல்கும்
விரக வாயுவு, வெடிப்ப நக்கு, இயம்புதல் கொண்டான்:

     தனது இரு கொம்புகளிடையே தலைச்சீரா போலப் பாம்புப் படத்தைக்
கொண்டிருந்து, மிக்க சினங் கொண்ட பாம்பு எழுந்து ஆடுவது போன்ற
உடலுருவமும் கொண்டு, செம்மறியாட்டின் முகத்தை உடையவனாய், நரக
உலகம் விரும்பத்தக்க வகையில் மனிதருக்குக் காம நோயை விளைவிக்கும்
விரக வாயுவு என்னும் பேய், அது கேட்டு வெடிபடச் சிரித்து, பின் வருமாறு
சொல்லலானான்:

     'பைத்து' - பையை உடையது = படத்தை உடையது.