பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்523

                 85
காரி ழந்திழி துளியென நாடொறுங் கனலிற்
பாரி ழந்திழி பல்லுயி ரியாவையும் பார்க்கி
னீரி ழந்திழி நிறைதவிர் காமத ரல்லாற்
சீரி ழந்திழி செயிரினா ரெண்ணுவ தரிதோ.
 
"காரி இழந்து இழி துளி என, நாள் தொறும் கனலில்,
பார் இழந்து, இழி பல் உயிர் யாவையும் பார்க்கில்
நீர் இழந்து இழி நிறை தவிர் காமதர் அல்லால்,
சீர் இழந்து இழி செயிரினார் எண்ணுவது அரிதோ?"

     "மேகத்தை விட்டு நீங்கி இறங்கி விழும் மழைத்துளிபோல, உலக
வாழ்வை முடித்து நாள் தோறும் நரக நெருப்பில் இறங்கி விழும் பல மனித
உயிர்கள் எல்லாவற்றையும் கணக்கிட்டுப் பார்த்தால், பண்பு இழந்து இழிந்து
விழும் நிறையைக் கைவிட்ட காமுகரை எண்ணுவது அரிதே அல்லாமல்,
வேறு வகையால் சீர் இழந்து இறங்கி விழும் பாவிகளை எண்ணுவது
அரிதோ?

                  86
என்னி யம்புவ னியானினி யிவரெலா மொருங்கு
முன்னி யம்பிய முரட்டொழி லியாவையு நோக்கிற்
கொன்னி யம்பினர் காமநாட் டினரெனக் கூறப்
பின்னி யம்பிடப் பிழைசெயுந் தொழிலியா துண்டோ.
 
"என் இயம்புவன் யான் இனி? இவர் எலாம் ஒருங்கு
முன் இயம்பிய முரண் தொழில் யாவையும் நோக்கில்,
கொன் இயம்பினர்; காமம் நாட்டினர் எனக் கூற,
பின் இயம்பிட, பிழை செயும் தொழில், யாது உண்டோ?

     "மேலும் நான் என்ன கூறுவேன்? இப்பேய்களெல்லாம் ஒருங்கு
முன்னே சொல்லிய வல்லபத் தொழில் யாவற்றையும் ஆராய்ந்து
நோக்கினால், வீணே ஏதேதோ சொல்லினர்; காமத்தை நிலை நாட்டினர்
என்று ஒன்று கூறவே, பாவத்திற்கு ஆளாக்கும் தொழிலென்று, அதன்
பின்னும் சொல்லவென்று ஏதேனும் உண்டோ?

     காமப் பாவத்திற்கு நிகரான பாவம் வேறு இல்லையென்பது கருத்து.