|
| 87 |
வேட்ப தோர்வினை
விலக்கினர் மானிட ராயின்
மீட்ப தோர்வினை விழைந்துல கழிக்கும்பற் றொழிலைக்
கேட்ப தோர்வினை கிடத்திடப் பயனிலா வாசை
கோட்ப தோர்வினை குணிப்பநாங் கொற்றமா மென்றான். |
| |
"வேட்பது ஓர்
விளை விலக்கினர் மானிடர் ஆயின்,
மீட்பது ஒர் வினை விழைந்து, உலகு அழிக்கும் பல் தொழிலைக்
கேட்பது ஓர் வினை, கிடத்திடப் பயன் இலா ஆசை
கோட்பது ஓர் வினை குணிப்ப நாம், கொற்றம் ஆம்" என்றான். |
"காமத்தை விரும்புதலாகிய
ஒரு செயலை மட்டும் மனிதர்
விலக்கிவிட்டாரெனின், அதினின்று மீட்பதற்கான ஒரு செயலை விரும்பி,
உலகத்தைப் பாவத்தால் அழிக்கும் பிற பல தொழில்களைப் பற்றிக்
கேட்டு அறிவதாகிய ஒரு செயல், உலகை அழித்து வீழ்த்தப் பயன்படாததே
ஆகும். காம ஆசையால் கோணலுறச் செய்வதாகிய ஒரு செயலை நாம்
கருதிச் செய்யவே, நமக்கு வெற்றி உண்டாகும்" என்றான்.
பேய்க்கரசன்
தந்த திட்டம்
| 88 |
மெய்யெஞ்
சாவுரை வியந்துகேட் டலகைக ளார்ப்ப
மையெஞ் சாவரை வரையினைத் தழுவிய வண்ணம்
பொய்யெஞ் சாவிறை புகன்றவற் பொறைப்புயந் தழுவி
மொய்யெஞ் சாநிறை வஞ்சக முயல்வினை மொழிந்தான். |
| |
மெய் எஞ்சா
உரை வியந்து கேட்டு அலகைகள் ஆர்ப்ப,
மை எஞ்சா வரை வரையினைத் தழுவிய வண்ணம்,
பொய் எஞ்சா இறை, புகன்றவன் பொறைப் புயம், தழுவி,
மொய் எஞ்சா நிறை வஞ்சக முயல்வினை மொழிந்தான்: |
உண்மை தவறாத
இப்பேச்சைப் பிற பேய்கள் கேட்டு வியந்து
முழங்கவே, பொய்யிற் குறைபடுதல் இல்லாத பேய்க்கரசன், அவ்வாறு கூறிய
விரகவாயுவின் மலை போன்ற தோள்களை, மேகம் நீங்குதல் இல்லாத ஒரு
மலை மற்றொரு மலையைத் தழுவிய தன்மையாகத் தழுவி, பாவப் போரில்
தோல்வி காணாத நிறைவான வஞ்சக முயற்சிகளைப் பின்வருமாறு சொல்லத்
தொடங்கினான்:
|