பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்527

     "மயக்கத்தோடு கூடி ஆசை வளருமாறு, என் ஏவலினால் கவிஞர்
தம் நூல்களில் கலந்து வைத்தவிடத்து, நாவின் நுனியில் வைத்த தேன்
எனப் போற்றப் படும் காமம் மிகுதியாகக் கலந்த பாடல்களை, புலவர்
எடுத்துச் சொல்லவும் ஏனையோர் கேட்கவும் ஏற்பாடு செய்வாய்; பாலோடு
கலந்தவிடத்து, பாலென்று கருதிப் பருகிய நஞ்சு நீக்குவதற்கு அரியதாகும்.


                  93
ஒருவ ருஞ்செயி ருரைப்பவுங் கேட்பவுஞ் செய்தா
லிருவ ருஞ்செயி ரின்றியு நாணமே வெல்வாய்
மருவ ரும்புகர் பழகவே வழங்கிய முறையாந்
தெருவ ரும்புலி சீறினுஞ் சிறுவரும் வெருவார்.
 
"ஒருவரும் செயிர் உரைப்பவும் கேட்பவும் செய்தால்,
இருவரும் செயிர் இன்றியும், நாணமே வெல்வாய்;
மருவ அரும் புகர் பழகவே வழங்கிய முறை ஆம்.
தெரு வரும் புலி சீறினும், சிறுவரும் வெருவார்.

     "தெருவில் வந்து திரியும் புலி சீறினாலும், பழக்கத்தின் காரணமாகச்
சிறுவரும் அதற்கு அஞ்சமாட்டார். அது போலவே, ஒருவர் பாவத்தை
எடுத்துச் சொல்லவும் மற்றொருவர் அதைக் கேட்கவும் ஏற்பாடு செய்தால்,
அதன் மூலம் இருவரும் பாவத்திற்கு ஆளாவதல்லாமலும், பாவத்தைப்
பற்றிய நாணத்தையும் வென்று போக்குவாய்; நெருங்குதற்கு அரியதாகக்
கருதப்படும் பாவமும் பழக்கத்தின் காரணமாக வழக்கமாகக் கொள்ளத்தக்க
தன்மையை அடையும்.

     இரண்டாமடியில் 'அன்றியும்' என வரற் பாலது, மோனைப்
பொருட்டு 'இன்றியும்' என நின்றதேனும், இன்மைப் பொருள் கொள்ளாது,
அன்மைப் பொருளே கொள்க. 'மருவவரும்' என வேண்டியது. 'மருவரும்'
என நின்றது தொகுத்தல் விகாரம்.

                   94
அஞ்சி னாரெனி லமைதிரோர் முறையென்பாய் வஞ்சத்
தெஞ்சி லாயெனி லிணங்குவ ரிணங்கிய பின்றை
நஞ்சி லாநவை நறுமையென் றுணர்ந்துநிற் பவரோ
மஞ்சில் வாழுயர் வரைபெயர்ந் திழிந்தகல் போன்றே.