பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்533

     "மேலே காட்டிய இவ்வழிகளால் பாவமெல்லாம் எளிதில் தீரும்
என்று ஏற்பட்டவிடத்து, இயல்பாகவே பாவத்தின் பக்கமாய்ச் சாய்ந்து
செவ்வையான வழியை இழந்துபோன மனித உயிர்கள் கெடும் பொருட்டு,
மற்றொரு பாவ வழியை நாம் காட்டவோ வேண்டும்?" திரண்டு வழியும்
அருவி நீர் தன் முன்னே உள்ள சரிவில் இயல்பாகவே முடுகி வந்து
பாய்ந்து ஒடுவதாகவும், அவ்வழியை நாமோ அதற்குக் காட்டல்
வேண்டும்?" என்று, தன் அறிவின் அளவிற்கு அரிய கொடிய வஞ்சகம்
கொண்டவனாகிய கரோதரன் கூறினான்.

                    சடக்கலி கூற்று

                     102
சடக்கலி யெனும்பேய் மற்றெலாங் களிப்பிற் சருக்கொடு
                                  கருங்கட லோதம்
படக்கலி தளிர்ப்ப வுகளிமுன் பாய்ந்தான் படரிருண்
                                  முகிறரு மசனி
யடக்கலி யெடுத்தார்த் தறிவறை போக்கி யழலறை யலகைகா
                                  ணெஞ்சங்
கெடக்கலி யென்னோ மருட்டுணர் வென்னோ கேதமொன்
                              றெசித்திடைக் காணேன்.
 
சடக்கலி எனும் பேய், மற்று எலாம், களிப்பில் சருக்கொடு, கருங்
                           கடல் ஓதம்
படக் கலி தளிர்ப்ப, உகளி முன் பாய்ந்தான்; படர் இருள்
                           முகில்தரும் அசனி
அடக் கலி எடுத்து ஆர்த்து, "அறிவு அறை போக்கி அழல்
                           அறை அலகைகாள், நெஞ்சம்
கெடக் கலி என்னோ? மருட்டு உணர்வு என்னோ? கேதம் ஒன்று
                           எசித்திடைக் காணேன்.

     கரோதரன் கூறியதைக் கேட்டு, மற்றப் பேய்களெல்லாம், களிப்பு
மிகுதியால், கரிய கடலின் அலை ஓசையும் கெடுமாறு முழக்கம் பெருக்கி
நிற்க, சடக்கலி என்னும் பேய் குதித்து முன்னே பாய்ந்தான்; படர்ந்த
இருண்ட மேகம் பிறப்பிக்கும் இடியையும் வெல்லத் தக்க ஓசை கொண்டு
முழங்கிப் பின் வருமாறு சொல்வான்: "அறிவை அறவே கெடுத்து
நெருப்பைக் கக்கும் பேய்களே, நெஞ்சம் பிளந்து கெடுமாறு முழக்கம்
செய்வது ஏனோ? இம் மயக்க உணர்வுதான் ஏனோ? நான் நமக்குக் கேடு
ஒன்றும் எசித்தில் வந்துள்ளதாகக் காணேன்.