பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்542

                  பேய்க்கரசன் முடிப்புரை

     - விளம், - விளம், - மா, கூவிளம்

                113
மஞ்சொடு கடலொலி மயங்க வார்த்தபேய்
நஞ்சொடு வளர்சட நடையி லின்னவா
யஞ்சொடு மும்மதி யளவும் போக்கிவெந்
நெஞ்சொடு வளர்பழி நினைக்குந் தன்மையோ.
 
மஞ்சொடு கடல் ஒலி மயங்க ஆர்த்த பேய்,
நஞ்சொடு வளர் சட நடையில், இன்ன ஆய்
அஞ்சொடு மும் மதி அளவும் போக்கி, வெம்
நெஞ்சொடு வளர் பழி நினைக்கும் தன்மையோ?

     மேகத்தின் இடியோசையோடு கடலோசையும் கூடிய தன்மையாய்
முழங்கிய பேய்கள், நஞ்சோடு கூடிய வஞ்சகப் போக்கில், ஐந்தோடு
மூன்றுமாக எட்டு மாதம் வரையில் இவ்விதமாய்ப் போக்கி, தம் கொடிய
நெஞ்சோடு வளர விட்ட பழிச்செயல் ஒருவர் நினைக்கும் தன்மைக்கு
அடங்குவதோ?

     அஞ்சு - ஐந்து என்பதன் போலி.

                 114
இழுக்கியை செருக்கெழ வின்ன யாவையும்
வழுக்கியை களிப்பொடு கேட்ட மன்னவ
னொழுக்கியை செவிகளை யொலுக்கிக் கொம்பசைத்
தழுக்கியை யெயிற்றுவா யவிழ்த்துக் கூறினான்.
 
இழுக்கு இயை செருக்கு எழ இன்ன யாவையும்,
வழுக்கு இயை களிப்பொடு கேட்ட மன்னவன்
ஒழுக்கு இயை செவிகளை ஒலுக்கி, கொம்பு அசைத்து,
அழுக்கு இயை எயிற்று வாய் அவிழ்த்து, கூறினான்:

     பின் இழுக்கு உண்டாக்கும் தற்செருக்கு ஏற்படத்தகும் இவை
எல்லாவற்றையும், தவறு நேர்வதற்குக் காரணமான களிப்போடு கேட்ட
பேய்க்கரசன், ஒழுங்குபட அமைந்த தன் செவிகளை நிமிர்த்தி, கொம்புகளை
அசைத்து, அழுக்கு நிறைந்த பற்களைக் கொண்ட வாயைத் திறந்து, பின்
வருமாறு கூறத் தொடங்கினான்: