பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்543

                115
செயற்கடல் கடந்தவெம் வஞ்சச் சேனைகாள்
மயற்கடல் கடந்தநும் மந்தி ரத்தஞ
ரியற்கடல் கடந்துநா னீந்தி யின்புறும்
பயற்கடல் கடந்தெனப் பரிவற் றோங்கினேன்.
 
"செயல் கடல் கடந்த வெம் வஞ்சச் சேனைகாள்,
மயல் கடல் கடந்த நும் மந்திரத்து, அஞர்
இயல் கடல் கடந்து நான் நீந்தி, இன்பு உறும்
பயன் கடல் கடந்து என, பரிவு அற்று ஓங்கினேன்.

     "செயல் திறம் என்னும் கடலைக் கடந்த கொடிய வஞ்சகம் கொண்ட
சேனைகளே, மயக்கம் என்னும் கடலைக் கடக்கக் காட்டிய உங்கள்
திட்டத்தின் மூலம், துன்ப இயல்பு என்னும் கடலை நான் நீந்திக் கடந்து,
இன்பமுறுதலாகிய பயனைக் கொண்டுள்ள கடலைக் கடந்த தன்மையாக,
துன்பம் நீங்கி எழுச்சி கொண்டேன்.

                116
காட்சியுங் கருத்தெலாங் கடந்த மாயைதன்
சூட்சியுந் திளைத்தநீர் துணையெற் காகவென்
மாட்சியுங் கோன்மையு மறுக்க லாவதோ
தாட்சியுங் கலக்கமுந் தணந்த கூளிகாள்.
 
"காட்சியும், கருத்து எலாம் கடந்த மாயை தன்
சூட்சியும் திளைத்த நீர் துணை எற்கு ஆக, என்
மாட்சியும் கோன்மையும் மறுக்கல் ஆவதோ,
தாட்சியும் கலக்கமும் தணந்த கூளிகாள்?

     "தாழ்வும் கலக்கமும் நீங்கிய பேய்களே, அறிவுத் தெளிவும் பிறர்
கருத்தையெல்லாம் கடந்த மாயையின் திட்டத் திறமும் மிக்க நீங்கள்
எனக்குத் துணையாய் நிற்கவே, என் மாட்சியும் ஆட்சியும் எவரும்
மறுக்கக் கூடியதோ?

     'தாழ்ச்சி' என்பது, எதுகை நோக்கி, 'தாட்சி' எனத் திரிந்தது.