பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்546

                121
புல்வதற் கருஞ்சடம் புணர்ந்த சூட்சியால்
வெல்வதற் கருஞ்சமர் வினைசெய் வார்க்கெலா
மொல்வதற் கரும்பய னுதவு வேனெனாச்
சொல்வதற் கருஞ்சினத் தரசன் சொற்றினான்.
 
"புல்வதற்கு அருஞ் சடம் புணர்ந்த சூட்சியால்,
வெல்வதற்கு அருஞ் சமர் வினை செய்வார்க்கு எலாம்,
ஒல்வதற்கு அரும் பயன் உதவுவேன்" எனா,
சொல்வதற்கு அருஞ்சினத்து, அரசன், சொற்றினான்.

     "பொருந்துவதற்கு அரிய வஞ்சனை பொருந்திய திட்டத்தால்,
வெல்வதற்கு அரிய அப்போரில் சிறந்த செயல் ஆற்றுவோர்க்கெல்லாம்,
கிடைத்தற்கரிய நலங்களை நான் தருவேன்" என்று, பேய்க்கரசன்,
சொல்வதற்கரிய சினத்தோடு கூறினான்.

                பேய்களின் மகிழ்ச்சி

                 122
அழுந்துவிட்டிரளிடி யனைய கொம்புகள்
கொழுந்துவிட் டழன்றர சடியிற் கூர்பட
விழுந்துவிட் டிரள்கெட வெறியொ ருங்குமார்ப்
பெழுந்துவிட் டிரட்டின வெரியுங் கூசவே.
 
அழுந்து விண் திரள் இடி அனைய, கொம்புகள்
கொழுந்து விட்டு அழன்று அரசு அடியில் கூர் பட
விழுந்து, விண் திரள் கெட, வெறி ஒருங்கும் ஆர்ப்பு
எழுந்து, விட்டு இரட்டின, எரியும் கூசவே.

     அதனைக் கேட்டு, பேய்கள் எல்லாம், மேகங்கள் அழுந்திய
வானத்தில் திரண்டெழுந்த இடிகள் போல, தம் கொம்புகள் கொழுந்துவிட்டு
எரிந்து, பேய்க்கரசன் அடியில் அக்கொம்புகளின் முனை படுமாறு விழுந்து,
மேகக் கூட்டமும் ஒப்பாகாமல் கெடுமாறு, ஒருங்கே ஆரவாரம் எழுப்பி,
நெருப் புலகமாகிய நரகமும் கூசுமாறு, இடைவெளிவிட்டுத் தொடர்ந்து
முழங்கின.

     பேய்கள் திரண்டு விழுந்த வேகத்திற்கு மேகங்களில் திரண்டு
விழுந்த இடிகள் உவமை. 'விண்' முதலடியில் வானத்தையும், மூன்றாமடியில்
மேகத்தையும் குறித்தது. 'எரி' எரியை உடைய நரகத்திற்கு ஆகு பெயர்.