பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்547

               123
கொக்கரித் திரட்டிடக் குதித்து வப்பறா
மிக்கரித் திரட்பட வெற்றி வெற்றியென்
றெக்கரித் தழற்றுளி யிறைத்தி றைத்தன
நக்கரித் தெயிற்றெரி நதுத்த பேயெலாம்.
 
கொக்கரித்து இரட்டிடக் குதித்து, உவப்பு அறா
மிக்கு, அரித் திரள் பட, "வெற்றி! வெற்றி!" என்று
எக்கரித்து, அழல் துளி இறைத்து இறைத்தன,
நக்கரித்து எயிற்று எரி நதுத்த பேய் எலாம்.

     தம் பற்களில் பற்றிய நெருப்பை நக்கி நக்கி அவிக்க முயன்று
கொண்டிருக்கும் இயல்புள்ள பேய்கள் எல்லாம் கொக்கரித்துக் குதித்து
முழங்கி, அதனாலும் மகிழ்ச்சி அடங்காது மிகுந்து, சிங்கக் கூட்டங்களினும்
மேலாக, "வெற்றி! வெற்றி!" என்று எக்களித்து, நெருப்புத் துளிகளை வாரி
வாரி இறைத்துக் கொண்டிருந்தன.

     'எக்களித்து' என்பது, எதுகை இன்னோசைப் பொருட்டு, 'எக்கரித்து'
என நின்றது.

                  124
புகழ்ச்சிவந் துற்றகாற் பொலிந்த மாண்பினா
ரிகழ்ச்சிவந் துதிக்குமென் றெண்ணிப்
                          போற்றுவார்
நெகிழ்ச்சிவந் துதிப்பது நினைக்கி லாதபேய்
மகிழ்ச்சிவந் துவந்தன கடையின் மாழ்கவே.
 
புகழ்ச்சி வந்து உற்ற கால், பொலிந்த மாண்பினோர்,
இகழ்ச்சி வந்து உதிக்கும் என்று எண்ணி,
                               போற்றுவார்;
நெகிழ்ச்சி வந்து உதிப்பது நினைக்கிலாத பேய்,
மகிழ்ச்சி வந்து உவந்தன, கடையில் மாழ்கவே.

     பொலிந்த மாண்புடையோர், தமக்குப் புகழ்ச்சி வந்து சேர்ந்த
காலத்தில், பின்னால் இகழ்ச்சி வந்து நேரவும் கூடு மென்று எண்ணி,
அடக்கம் கொண்டிருப்பர்; பின்னால் தமக்குத் தளர்வு வந்து சேர்வதைப்
பற்றி நினையாத அப்பேய்களோ, இறுதியில் அது வரும்போது மயங்கி
மெலியும் வண்ணம், இப்பொழுது மகிழ்ச்சி வந்தது கண்டு பெரிதும்
மகிழ்ந்து துள்ளின.

           குணுங்கு மந்திரப் படலம் முற்றும்

           ஆகப் படலம் 23க்குப் பாடல்கள் 2126