பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்548

இருபத்து நான்காவது

சோகு தோர்வைப் படலம்

     பேய்கள் சூசையோடும் மரியாளோடும் போர் தொடுக்க முயன்று
தோற்றத்தைக் கூறும் பகுதி. சோகு-பேய். தோர்வை - தோல்வி.

                 பேய்களின் போர்க் கோலம்

     - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                     1
காமலி யலர்க்கோ லானுங் கன்னியந் துணைவி யாளுந்
தாமலி தவத்தி் னிஞ்சி தளர்ந்திடைக் கதுவிட் டெஞ்சத்
தீமலி குணுங்கெ லாமேழ் செயிர்க்குரி யணிக ளேழாய்ப்
பூமலி நடுக்கிற் கூசப் புதவொழிந் தனபோ ரோர்ந்தே.
 
கா மலி அலர்க் கோலானும், கன்னி அம் துணைவியாளும்,
தாம், மலி தவத்தின் இஞ்சி தளர்ந்து, இடைக்கது விட்டு, எஞ்ச,
தீ மலி குணுங்கு எலாம் ஏழ் செயிர்க்கு உரி அணிகள் ஏழாய்,
பூ மலி நடுக்கின் கூச, புதவு ஒழிந்தன, போர் ஓர்ந்தே.

     மணம் மிக்க மலர்க் கோலைத் தாங்கிய சூசையும், கன்னிமையைத்
தனக்கு அழகாகக்கொண்ட துணைவியாகிய மரியாளும் நிறைந்த தவமாகிய
மதில் தளர்ந்தும், அதன் இடையே வெடிப்பு ஏற்பட்டும் தாம் மெலியுமாறு
செய்ய வேண்டி, தீமை நிறைந்த பேய்களெல்லாம் ஏழு பாவங்களுக்கு
உரிய ஏழு படையணிகளாய், போர் செய்தலைக் கருதி, பூவுலகம் மிகுந்த
நடுக்கத்தோடு கண்டு கூசத் தக்க விதமாய், நரகத்தைவிட்டு எழுந்து வந்தன.

     'கான்', கா எனவும், 'தீமை' தீ எனவும், எதுகைப் பொருட்டு, ஈறு
குறைந்து நின்றன. "ஏழு பிரதான பாவங்களாவன : ஆங்காரம், உலோபம்,
காமம், கோபம், காய்மகாரம், ஆகாரப் பொம்மல், அறத்தளர்ச்சி இவை
ஏழு என்க" என்பது பழைய உரை அடிக்குறிப்பு.