பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்573

     மத யானைகள் எரியவும், வலிமை வாய்ந்த குதிரைகள் எரியவும்,
சக்கரங்களோடு தேர்களும் சேர்ந்து எரியவும், விரிந்த வில்லுகள்
எரியவும், சினந்த அம்புகள் எரியவும், கூர்மையான வேல்கள் எரியவும்,
வாள்கள் எரியவும், இரு கண்கள் எரியவும், வீரமுள்ள மனம் எரியவும்,
இரு செவிகள் எரியவும், வாய் எரியவும், எதிர்ப்பட்ட எல்லாமே
எரியவுமாக, தாமும் எரியும் மைத்தனும் வடுவனுமாகிய இரு பேய்களும்
எரியும் தன்மையுள்ள இரண்டு கதாயுதங்களைக் கொண்டு போரிட்டனர்.

     'பொர' என்ற வினையெச்சம், முற்றாக்கி முடிக்கப்பட்டது.
அவ்வாறன்றி, வரும் பாடலோடு தொடர்ந்து பொருள் முடிவதாகக்
கொள்ளினும் அமையும்.

                   39
திரிவ ருகளுவ ரணுகி யகலுவர் திமிர விருபுய முறுமுவர்
பிரிவர் மிடைகுவர் புரள வெருளுவர் பிரள வுருளுவர்
                                     குருதிகள்
சொரிவ ருளைகுவர் சுழலு கதையொடு சுசியின் வெருளுவர்
                                     தொனியெழ
முரிவ ரெரிகுவர் முனி வதிர்குவர் முனையி லெதிரிலர்
                                     முனைவரே.
 
திரிவர்; உகளுவர்; அணுகி அகலுவர்; திமிர இரு புயம் உறுமுவர்;
பிரிவர்; மிடைகுவர்; புரள வெருளுவர்; பிரள உருளுவர்; குருதிகள்
சொரிவர்; உளைகுவர் சுழலு கதையொடு சுசியின் வெருளுவர்;                                      தொனி எழ
முரிவர்; எரிகுவர்; முனிய அதிர்குவர்; முனையில் எதிர் இலர்                                      முனைவரே.

     அவ்விருவரும் பிரிந்து நடை போட்டுத் திரிவர்; துள்ளிக் குதிப்பர்;
அணுகி வந்து அகன்று செல்வர்; இரு புயங்களும் விறைத்து நிற்க
உறுமுவர்; பின்னும் பிரிவர்; மீண்டும் நெருங்குவர்; புரண்டு அச்சம்
காட்டுவர்; புரண்டு புரண்டு உருளுவர்; குருதித் துளிகள் சொரிந்து நிற்பர்;
சோர்ந்து நிற்பர்; மீண்டும் சுழற்றிய கதாயுதத்தோடு நெருப்புப்போல் சினம்
காட்டுவர்; ஓசை பிறக்க முறிந்தோடுவர்; எரிவர்; வெறுப்புக் காட்டி
முழங்குவர். இவ்வாறெல்லாம் போரில் தமக்கு யாரும் நிகரில்லையாக
முனைந்து நிற்பர்.