பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்579

"விண்ணின் மேல் வைத்த நன்று இழந்த வெம் பழி,
மண்ணின் மேல் வைத்த மன் உயிரின் வைத்த பேய்,
கண்ணின் மேல் வைத்த மாசு என்னக் காட்டிய
எண்ணின் மேல் வைத்த உட்கு இயற்றும் மாயமே.

     "வானுலகில் தனக்கென வைத்திருந்த நன்மையை இழந்ததனாற்
கொண்ட கொடிய பழியை, மண்ணுலகில் படைத்து வைக்கப்பட்டுள்ள
மனித உயிர்களின் மீது காட்டி வைத்துள்ள பேய், காண்பவர் கண்ணில்
படிந்துள்ள மாசு இத்தோற்றம் என்பதுபோல் காட்டிய, எண்ணில்
அடங்காத அச்சத்தை விளைவிக்கும் மாயமே இது.

     'இது' என்பது வருவித்து உரைக்கப்பட்டது.

             49
மாற்றரும் வஞ்சக மாய வித்தையா
லாற்றரும் வெருவுட னகங்க லங்கவே
போற்றரும் பழிவெறி புரைபு குத்தலாற்
றேற்றரு மழிவுறிச் சிதையும் பாரெலாம்.
 
"மாற்று அரும் வஞ்சக மாய வித்தையால்,
ஆற்று அரும் வெருவுடன் அகம் கலங்கவே,
போற்று அரும் பழி வெறி புரை புகுத்தலால்,
தேற்று அரும் அழிவு உறிச் சிதையும் பார் எலாம்.

     "மாற்றுதற்கரிய தன் வஞ்சக மாய வித்தையால், தாங்குதற்கரிய
அச்சத்துடன் மனிதர் மனம் கலங்குமாறு, விலக்குதற்கரிய பழி பூண்டுள்ள
பேய் பாவத்தைப் புகுத்துதலால், இவ்வுலகமெல்லாம் தேற்றுதற்கரிய
அழிவுக்கு ஆளாகிச் சிதையும்.

               50
இத்திறத் தினாலன்றோ விருள்வி ரும்பிய
மைத்திறத் தடல்கொளு மண்ணை கங்குலிற்
பொய்த்திறத் துகுத்ததீக் கனவைப் பூத்தவர்
மெய்த்திறத் துணர்வற விளைக்குந் தீமையே.
 
"இத் திறத்தினால் அன்றோ, இருள் விரும்பிய
மைத் திறத்து அடல் கொளும் மண்ணை, கங்குலில்
பொய் திறத்து உகுத்த தீக் கனவைப் பூத்து, அவர்
மெய்த் திறத்து உணர்வு அற விளைக்கும் தீமையே?