பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்584

     நிமிர்ந்த வைரம் போன்ற நெஞ்சம் கொண்ட சூசை தனது
பார்வையாலேயே, பேய்களின் வீரத்தை அழித்தான்; அவற்றை எதிர்த்துத்
தாக்கும் தன்மையாக, அறம் என்னும் கொடிய அம்பைப் பல தொடுப்பாக
அவற்றின் மீது செலுத்தினான்; பேய்கள் தன் மீது செலுத்திய
வேல்களையெல்லாம் தடுத்து நீக்கினான்.

     'நோக்கினான், தாக்கினான்' என்ற இடங்களில் 'ஆன்' மூன்றாம்
வேற்றுமை உருபு.

               59
மேவி வான்றொழுந் தன்றவ வில்லினாற்
றூவி னாலெனக் கெட்டதிர் சோகெலா
மோவி நாணவொ ருங்கிரு காற்கொடு
பூவி றேய்த்தது போலவொ டுக்கினான்.
 
மேவி வான் தொழும் தன் தவ வில்லினால்
தூவினால் என, கெட்டு அதிர் சோகு எலாம்
ஓவி நாண, ஒருங்கி இரு கால் கொடு
பூவில் தேய்த்தது போல ஒடுக்கினான்.

     வானுலகம் விரும்பித் தொழும் தன் தவமாகிய வில்லினால்
தூளாக்கித் தூவியது போலவும், தம் வலிமை கெட்டு அதிர்ச்சி கொண்ட
பேய்களெல்லாம் ஓய்ந்து நாணுமாறு, தன் இரு கால்களால் அவற்றை
ஒருங்கே பூமியிலிட்டுத் தேய்த்தது போலவும் ஒடுக்கினான்.

                60
புரிந்த நின்றயைப் பொற் பொடஞ் சேனையா
விரிந்த மன்னுயிர் வேண்டியிப் பேயெலா
மெரிந்த தீப்புதைத் தோட்டென வின்னொளி
சொரிந்த பூமுகத் தோன்றலை வேண்டினான்.
 
"புரிந்த நின் தயைப் பொற்பொடு, அஞ்சேன், ஐயா!
விரிந்த மன் உயிர் வேண்டி, இப் பேய் எலாம்
எரிந்த தீப் புதைத்து ஓட்டு" என, இன் ஒளி
சொரிந்த பூ முகத் தோன்றலை வேண்டினான்.