பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்585

     "ஐயா, எனக்குச் செய்துள்ள உன் தயவின் திறத்தால், நான் இப்
பேய்களுக்கு அஞ்ச மாட்டேன். ஆனால், பரந்து கிடந்த பிற மனித
உயிர்களின் பொருட்டு, இப் பேய்களையெல்லாம் எரியும் நெருப்பைக்
கொண்டுள்ள நரகத்தில் சென்று புதையுமாறு ஓட்டுவாய்" என்று, இனிய
ஒளியைச் சொரிந்த மலர் போன்ற முகங்கொண்ட திருமகனை
வேண்டினான்.


               61
மீன்மு கத்துணர் காட்சியின் மேன்மையா
னூன்மு கத்திலோ ராண்டுரை யாதபின்
கான்மு கத்தலர் வாய்கனி விண்டுரை
வான்மு கத்தமு தூறிவ ழங்கினான்.
 
மீன் முகத்து உணர் காட்சியின் மேன்மையான்,
ஊன் முகத்தில் ஓர் ஆண்டு உரையாத பின்,
கான் முகத்து அலர் வாய் கனி விண்டு, உரை,
வான் முகத்து அமுது ஊறி, வழங்கினான்.

     விண்மீனிடத்துக் கண்டு உணரும் காட்சி அழகினும் மேம்பட்ட
குழந்தை நாதன், ஊனுடல் உருவில் ஓராண்டு வரையில் பேசாதிருந்த
பின், மணம் கொண்ட மலர் போன்ற தன் வாயைக் கனிவோடு திறந்து,
வானுலகத்து அமுதம் ஊறி வழிந்த தன்மையாகப் பேசலுற்றான்.

               62
மின்னித் தாரகை நோக்கென வெண்மலர்
துன்னித் தாங்கிய சூசையை நோக்கினன்
கன்னித் தாய்கம லக்கரத் தாசனத்
துன்னித் தானினி தெந்தையென் றோதினான்.
 
மின்னித் தாரகை நோக்கு என, வெண் மலர்
துன்னித் தாங்கிய சூசையை நோக்கினன்;
கன்னித் தாய் கமலக் கரத்து ஆசனத்து
உன்னி, தான், இனிது, "எந்தை!" என்று ஓதினான்.

     விண்மீன் மின்னிப் பார்ப்பதுபோல, தன் கொடியில் வெண்ணிற
மலர்கள் செறியத் தாங்கிய சூசையை, தான் பார்த்தான்; கன்னியும்
தாயுமாகிய மரியாளின் தாமரை மலர் போன்ற கையாகிய ஆசனத்தில்
இருந்த வண்ணம் அது தகுமென்று கருதி, "என் தந்தையே!" என்று
இனிதாகச் சொன்னான்.

     'எந்தை' என்பது, 'என் தந்தை' என்பதன் மரூஉ.