63 |
சிந்தை
நீடெழச் சீர்த்திவை கேட்டனன்
முந்தை நீயுள மூவுல கிற்கெலாந்
தந்தை நீதனிக் கன்னி தனயனீ
எந்தை நீயெனை யென்றனை யோவென்றான். |
|
சிந்தை நீடு
எழச் சீர்த்து, இவை கேட்டனன் :
"முந்தை நீ; உலா மூ உலகிற்கு எலாம்
தந்தை நீ; தனிக் கன்னி தனயன் நீ;
'எந்தை!' நீ எனை, என்றனையோ!" என்றான். |
சூசை, தன் சிந்தனை
பெரிதும் எழுச்சி கொள்ளச் சிறந்து,
இச்சொற்களைக் கேட்டான் : "எல்லாவற்றிற்கும் முந்தியவன் நீ;
உள்ள மூன்று உலகங்களுக்கெல்லாம் தந்தையும் நீ; ஒப்பற்ற கன்னி
பெற்றெடுத்த மகன் நீ; இத்தகைய நீயே என்னை, 'என் தந்தையே!'
என்று அழைத்தாயோ!" என்று வியந்தான்.
'முந்தை' என்பதனை,
'முன் தந்தை' என்பதன் மரூஉவாகக்
கொண்டு, எத்தந்தைக்கும் முந்திய தந்தை நீ' என்று கொள்ளலுமாம்.
64 |
அருளின்
மாகடன் மூழ்கவ ருந்தவன்,
மருளின் மாகடன் மூழ்கிய மண்ணைகள்
வெருளின் மாகடன் மூழ்கிவி ழுந்தெரி
யிருளின் மாகடன் மூழ்கின வென்னவே. |
|
அருளின் மா கடல்
மூழ்க அருந்தவன்,
மருளின் மா கடல் மூழ்கிய மண்ணைகள்,
வெருளின் மா கடல் மூழ்கி, விழுந்து, எரி
இருளின் மா கடல், மூழ்கின, என்னவே. |
திருமகன், 'எந்தையே!'
என்று அழைக்கவும், அருந்தவத்தோனாகிய
சூசை தெய்வ அருள் என்னும் பெருங் கடலில் மூழ்கினான். அதைக்
கேட்டு முதலில் மயக்கம் என்னும் பெருங் கடலில் மூழ்கிய பேய்கள்,
பின் அச்சமென்னும் பெருங் கடலில் மூழ்கி, இறுதியில் நெருப்போடு
கூடிய இருள் நிறைந்த பெருங் கடலாகிய நரகத்தில் விழுந்து மூழ்கின.
'என்னவே'
அசைநிலையாகக் கொள்ளவேண்டும்.
|