பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்59

     "உலக முடிவு நாளில் கடல் நீர் குடையப்பட்டு முழங்கிப் பொங்கிக்
காட்டும் சினம் போல், மத மயக்கங் கொண்ட யானைகள், குதிரைகள்,
உருளும் தேர்கள், காலாள் என்றுள்ள போருக்குரிய நால்வகைப் படையும்
குடையப்பட்டு, கீழுள்ளது மேலே வரவும், மேலுள்ளது கீழே போகவுமாகப்
பக்கத்தில் வளைந்துவிடும் அலையோடு அலைந்து கொண்டிருக்கும்.
அப்பொழுது எழுந்த முழக்கத்துக்கு இவ்வுலகில் நிகரே இல்லை.


                 66
ஓரா யிரமால் கரிமா வோரா யிரநூ றயமா
வீரா யிரமோ ரெழுநூ றுருடே ரெரிதும் மியவே
லாரா யினபற் கோடி யமிழ்ந்தி யிமைப்பி லனைத்தும்
பேரா யினநிர் வலையிட் டபிரா னிறைவா னினனால்.
 
ஓர் ஆயிர மால் கரிமா ஓர் ஆயிர நூறு அய மா,
ஈர் ஆயிரம் ஓர் எழுநூறு உருள் தேர், ஏரி தும்மிய வே-
லார் ஆயின பல் கோடி அமிழ்ந்தி, இமைப்பில் அனைத்தும்,
பேர் ஆன நீர் வலை இட்ட பிரான், நிறை வாரினன் ஆல்.


     "மத மயக்கங் கொண்ட ஆயிரம் யானைகளும், நூறாயிரம்
குதிரைகளும், இரண்டாயிரத் தெழுநூறு உருண்டோடும் தேர்களும்,
நெருப்பைக் கக்கிய வேலைத் தாங்கிய வீரரால் அமைந்த காலாட் படை
பல கோடியும் இவ்வாறு கடலில் அமிழ்ந்தின. நீரென்னும் பேரால்
அமைந்த வலையை வீசிய ஆண்டவன், இமைப்பொழுதில்
அவற்றையெல்லாம் நிறைவாக வாரிக் கொண்டான்.

     'ஆல்' அசைநிலை. அய மா - குதிரையாகிய விலங்கு; குதிரை.


                    67
போர்மீ தேந்தும் புரவி கரிதேர் பொருநர் பொருவாச்
சீர்மீ தேந்துஞ் செருக்குற் றெவையுந் தெளியா நெஞ்சி
னேர்மீ தேந்துந் திறன்கொ ணிமலற் கஞ்சாக் கொடுங்கோ
னேர்மீ தேந்தும் படையோ டிமைப்பிற் சிதைந்தா னழிந்தான்.