|
போர் மீது ஏந்தும்
புரவி கரி தேர் பொருநர், பொருவாச்
சீர் மீது ஏந்தும் செருக்கு உற்று, எவையும் தெளியா நெஞ்சின்,
நேர் மீது ஏந்தும் திறன் கொள் நிமலற்கு அஞ்சாக் கொடுங்கோன்,
ஏர் மீது ஏந்தும் படையோடு இமைப்பில் சிதைந்தான் அழிந்தான். |
"போர்க் களத்தில்
சிறந்து விளங்கும் குதிரை, யானை, தேர்,
காலாள் என்னும் நால்வகைப் படையும், ஒப்பற்ற சிறப்பினோடு தான்
கொண்டுள்ளமையால் செருக்குற்று, அச் செருக்கால் எவற்றையும் தெளிய
உணராத நெஞ்சம் கொண்டிருந்து, ஒப்புக்கெல்லாம் மேலாக உயர்ந்து
நிற்கும் வல்லமை கொண்ட மாசில்லா ஆண்டவனுக்கும் அஞ்சாத கொடிய
எசித்து மன்னன், எழுச்சியினால் மேலோங்கி நிற்கும் தன் படையோடு
இவ்வாறு இமைப் பொழுதில் சிதைந்து அழிந்தான்.
| 68 |
கரைமே னின்றார்
கொடிஞ்சி கழிதேர்த் திரள்பற் றீவின்
புரைமேன் மிதக்க வாமைப் புரையிற் கிடுகு மிதக்கக்
குரைமே லெழும்போற் குடைவெண் கொடிவெண் கவரி மிதக்கத்
திரைமேன் மகரத் திரள்போற் செருமா மிதக்கக் காண்பார். |
| |
கரை மேல் நின்றார்,
கொடிஞ்சி கழி தேர்த் திரள் பல் தீவின்
புரை மேல் மிதக்க, ஆமைப் புரையின் கிடுகு மிதக்க,
குரை மேல் எழும் போல் குடை வெண் கொடி வெண் கவரி மிதக்க,
திரை மேல் மகரத் திரள் போல் செரு மா மிதக்கக் காண்பார் |
கரை மேல் நின்ற
இசுரவேலர் எசித்தியரின் கொடிஞ்சி இல்லாத
தேர்களின் திரள் பல தீவுகள் போல் கடலின் மேல் மிதந்து தோன்றவும்,
ஆமைகளைப் போல் கேடயங்கள் மிதக்கவும், நுரைகள் மேலே பறந்து
நிற்பது போல் குடைகளும் வெண்ணிறக் கொடிகளும் வெண் சாமரைகளும்
மிதக்கவும், திரைகளுக்கு மேலே சுறா மீன்களைப் போல் போருக்குரிய
யானைகளும் குதிரைகளும் மிதக்கவும் காண்பர்.
கொடிஞ்சி -
தேர் மொட்டு, செரு மா - போருக்குரிய விலங்குகள்;
யானை குதிரைகள் முதலியன.
|