பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்6

     மணமுள்ள அழகிய மலர்க் கொடியை மாலையாகக்கொண்ட சூசை
விரைந்து எழுந்தான்; மழையின் அழகிய நீர்த் தாரை போல், தன் கண்ணில்
பிறக்கும் கண்ணீர்த் தாரை சொரிந்து, அழகிய தன் துணைவியைத் தேடிக்
கண்டு, ஆண்டவன் நல்ல தென்று தெளிந்து அங்கு வானவன் மூலம் ஏவிய
கட்டளையை எடுத்துக் கூறினான்.

    நேர்ந்து, தேர்ந்து என்ற சொற்கள், எதுகைப் பொருட்டு, நேரி, தேரி
என நின்றன.

 
                                     9
செய்யிதட் டாமரை பழித்த சீறடித் 
துய்யிதட் டுப்பவிழ் சுருதி வாயினா
ளையிதட் டாரினா னறையத் தீமுனர்
நொய்யிதட் டாதென நொந்து வாடினாள்.
 
செய் இதழ்த் தாமரை பழித்த சீறு அடித்
துய் இதழ்த் துப்பு அவிழ் சுருதி வாயினாள்,
ஐ இதழ்த் தாரினான் அறைய, தீமுனர்
நொய் இதழ்த் தாது என நொந்து வாடினாள்.

     செந்நிற இதழ்களைக் கொண்ட தாமரை மலரைப் பழித்த சிறிய
அடிகளும் தூய உதடுகள் பவளம் போல் விரியும் வேத வாயும் கொண்ட
மரியாள், அழகிய இதழ்கள் உள்ள மலர்க் கொடியை மாலையாகக்
கொண்ட சூசை இவ்வாறு கூறவும், மெல்லிய இதழ்களிடையே இருக்கும்
பூந்தாது தீயின்முன் இடப் பட்டாற்போல நொந்து வாடினாள்.

     'இதழ்' என்ற சொல், 'இதள்' என நின்றாற் போலக் கொண்டு,
வருமொழியில் தகரம் வர, ளகரமும் தகரமும் டகரங்களாக மாறும் விதியை
ழகரத்திற்கும் பொருந்துவதாகக் கொண்டமைத்த இடம் இது.
கந்த புராணத்
தொடக்கத்துக் கச்சியப்ப முனிவர், 'திகழ் தசக்கரம்' என்பதனை, 'திகட
சக்கரம்' எனப் பொருத்தியது இதற்கு மேற்கோளாக அமையும்.

     சிறுமை + அடி - சீறடி.

 
                                          10
எதிரிலான் பகையிலா னிணையெ லாமிலா
னுதிரிலா மதுகையா லுணர்வின் மேனின்றான்
விதிரிலா விதியிதென் றிறைஞ்சி வேண்டினர்
பிதிரிலாத் திருவுளம் பேணித் தேரினார்.