பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்7

எதிர் இலான் பகை இலான் இணை எலாம் இலான்
உதிர் இலா மதுகையான் உணர்வின் மேல் நின்றான்
விதிர் இலா விதி இது என்று இறைஞ்சி வேண்டினர்;
பிதிர் இலாத் திரு உளம் பேணித் தேரினார்.

     தனக்கு எதிர் இல்லாதவனும் பகைஇல்லாதவனும் ஒப்புமை எதுவும்
இல்லாதவனும் கெடுதல் இல்லாத வல்லமை உள்ளவனும் உணர்வுக்கு
எட்டாமல் உயர்ந்து நின்றவனுமாகிய ஆண்டவனின் உதறக்கூடாத கட்டளை
இது என்று அவ்விருவரும் அவனைத் தொழுது வேண்டினர்; சிதைதல்
இல்லாத அவன் திருவுளத்தை விரும்பி ஏற்றுத் தெளிவு கொண்டனர்.


                          11

தேரிய மனத்தவர் தேறி நாயக
னாரிய முகத்துறை யங்க ணேகினார்
நீரிய முகிலெனப் படத்தை நீக்கலாற்
சூரிய னவியெனத் தோன்றல் தோன்றினான்.

 
தேரிய மனத்தவர் தேறி, நாயகன்
ஆரிய முகத்து உறை அங்கண் ஏகினார்;
நீரிய முகில் என் அப் படத்தை நீக்கலால்,
சூரியன் நவி எனத் தோன்றல் தோன்றினான்.

     தெளிந்த மனங் கொண்ட அவ்விருவரும் தேறி, ஆண்டவன்
அழகிய முகத்தோடு இருந்த அவ்விடம் சென்றனர்; நீரால் நிறைந்த
மேகம் என்னத்தக்க அப் போர்வையை விலக்கவும், ஆதவன் அழகு
போல் அம்மகன் தோன்றினான். 

     நவி - நவ்வி என்ற சொல்லின் இடைக்குறை.


                                12
முப்பொழு தொருபொழு தாக முற்றுணர்ந்
தெப்பொழு தனைத்துமெப் பொருளி யாவிலு
மெய்ப்பொரு டெளித்தவிர் காட்சி மேன்மையா
னப்பொழு துறங்கினா னன்னப் பார்ப்பனான்.        
 
முப் பொழுது ஒரு பொழுது ஆக முற்று உணர்ந்து
எப் பொழுது அனைத்தும் எப்பொருள் யாவினும்
மெய்ப்பொருள் தெளித்து அவிர் காட்சி மேன்மையான்,
அப்பொழுது உறங்கினான், அன்னப் பார்ப்பு அனான்.