பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்66

     'முன்' என்றது, மேலே காட்டிய துன்பங்கள் நிகழ்வதற்கு நேர்
முந்திய காலம் என்று அறிக. சகோபு - யாக்கோபு, அவனே இசுரவேல்
என்னும் பெயரும் பூண்டு, யூதர் குல முன்னவனாய்ப் பஞ்சம் பிழைக்க
எசித்து சென்றவன். சகோபைக் காத்த செய்தி : ப. ஏ, ஆதியாகமம்,
42 - 47 அதிகாரங்கள் காண்க.


               78
விண்டுளி யிலாமையால் வியன்ற பார்மிசை
பண்டுளி யனைத்திலும் பசிப ரந்துயி
ருண்டுளி சகோபுதன் னுயர்கு லத்தொடு
மண்டுளி யெசித்தின ரருள்செய் தாரரோ.
 
"விண் துளி இலாமையால், வீயன்ற பார்மிசை,
பண்டு உளி, அனைத்திலும் பசி பரந்து உயிர்
உண்ட உளி, சகோபு தன் உயர் குலத்தொடும்
அண்டு உளி எசித்தினர் அருள் செய்தார் அரோ.

     "மழைத் துளியே இல்லாமையால், பண்டைக் காலத்தில், பரந்த இம்
மண்ணுலகம் முழுவதும் பசி பரந்து உயிர்களை உண்ட காலத்தில், சகோபு
தன் உயர் குலச் சுற்றத்தாரோடு அணுகி வந்தபோது, எசித்து நாட்டார்
அவர்களுக்கு அருள் செய்து காத்தனர்.

     'அரோ' அசைநிலை, உண்ட+உளி - 'உண்டவுளி' என்பது, 'உண்டுளி'
எனத் தொகுத்தல் விகாரமாயிற்று.

               79
வேதமொன் றறிந்திலார் வேதங் கொள்குலங்
கேதமொன் றியதெனக் கிளர்ந்த வன்பொடு
மேதமொன் றிலவள ரகலு ளிட்டனர்
பேதமொன் றிலநயன் பெருக வீட்டினார்.
 
"வேதம் ஒன்று அறிந்திலர், வேதம் கொள் குலம்
கேதம் ஒன்றியது என, கிளர்ந்த அன்பொடும்,
ஏதம் ஒன்று இல வளர் அகலுள் இட்டனர்;
பேதம் ஒன்று இல நயன் பெருக ஈட்டினார்.

     "வேதத்தைப் பற்றி ஒன்றுமே அறியாத அவ்வெசித்தியர், வேதத்தைக்
கைக்கொண்ட சகோபின் குலம் துன்பத்திற்கு ஆளாகியதென்று கண்டு,
பெருகிய அன்போடு, இடையூறு ஒன்றுமின்றிப் பயிர் வளரும் நாட்டை
அவர்களுக்கு வாழக் கொடுத்தனர்; வேற்றுமை ஒன்றும் கருதாமல் தமக்கு
நன்மை பலவும் பெருகத் தேடிக்கொண்டனர்.