பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்67

                  80
தோன்முத லுடைமைசால் தொகுத்தங்
                         கோச்சு செங்
கோன்முத லளித்தகோன் பேணுங்
                         கொள்கையால்
வான்முத லவற்றொழும் வளர்ச கோபவன்
கான்முத லினமெலாங் கரையில் வாழ்ந்ததே.
 
தோல் முதல் உடைமை சால் தொகுத்து, அங்கு
                               ஓச்சு செங்
கோல் முதல் அளித்த கோன் பேணும் கொள்கையால்,
வான் முதலவன் தொழும் வளர் சகோபு அவன்
கால் முதல் இனம் எலாம் கரை இல் வாழ்ந்ததே.

     "யானை முதல் வேறு செல்வமெல்லாம் மிகுதியாகக் கொடுத்து,
அந்நாட்டில் அரசு செலுத்துதற்குரிய செங்கோலை முதலாய் அளித்த
எசித்து மன்னன் தம்மைப் பேணும் தன்மையால், வானகத்து முதல்வனாகிய
ஆண்டவனைத் தொழும் நலம் வளர்ந்த சகோபு என்பவனின் மகன் முதல்
தன் இனமெல்லாம் எல்லை இல்லாமல் வாழ்வு பெற்றது.

     'முதலவன்+தொழுது' என்பது, இரண்டாம் வேற்றுமைத் தொகைப்
பொருளில் 'முதலவற் றொழுது' என நின்றது. 'கால்' என்பது மகனுக்கு
ஆகு பெயர். இங்குக் குறித்த மகன் யோசேபு எனப்படும் ஆணரன்.
இவனைப் பற்றிய செய்தி, 20-வது, சித்திரக்கூடப் படலம், 55-119 காண்க.

               81
இக்குலத் திவன்பிறந் தெய்து வானெனா
வக்குலத் தினருவந் தருட்கைம் மாறுற
மைக்குலத் தொளிநலம் வகுப்பப் போயவண்
மெய்க்குலத் தறிவிட வன்று மேவினான்.
 
"இக் குலத்து இவன் பிறந்து எய்துவான் எனா,
அக் குலத்தினர் உவந்து அருள் கைம்மாறு உற,
மைக் குலத்து ஒளி நலம் வகுப்பப்போய் அவண்,
மெய்க் குலத்து அறிவு இட அன்று மேவினான்.

     "இவ்வாண்டவன் இச் சகோபின் குலத்தில் பிறந்து இவ்வுலகு
வந்தடைவான் என்றமையால், அந்த எசித்திய குலத்தினர் மகிழ்ந்து தம்
அருட் செயலுக்கு ஏற்ற கைம்மாறு பெறும்படி, இருள் கூட்டத்தினிடையே
ஒளி நலம் தருமாறு அங்கே போய், மெய்யான வேத குலத்தாருக்குரிய
ஞான அறிவைத் தந்துதவ அன்றே திருவுளங் கொண்டான்.