பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்68

             82
மேவிய கருத்தறிந் தரிய வேதநூ
லேவிய விதியினோ ரிவனங் கேகிய
தூவிய முகிலெனத் தோன்று வானென்றார்
பாவிய முறைக்கிது பயண முள்ளினான்.
 
"மேவிய கருத்து அறிந்து, அரிய வேத நூல்,
ஏவிய விதியினோர், இவன் அங்கு ஏகிய
தூவிய முகில் எனத் தோன்றுவான் என்றார்;
பாவிய முறைக்கு இது பயணம் உள்ளினான்.

     "இறைவனின் ஏவல் பெற்ற இறைவாக்கினர், இவன் அன்று
திருவுளங் கொண்ட கருத்தை அறிந்து, அரிள வேத நூலில்,
அவ்வெசித்து நாட்டிற்குச் சென்று சேர்ந்து பொழிந்த மேகம் போல்
இவன் அங்கு வந்து தோன்றுவான் என்று கூறினர்; அதனைச் செய்து
முடிக்கும் முறையை முன்னிட்டே இப்பயணம் மேற்கொள்ள
எண்ணினான்.

              83
உள்ளிய வருணல மொளித்துச் செய்குவான்
றெள்ளிய வமைதியீ தென்று தீயுளத்
தெள்ளிய வரசுசெய் யிகற்பெ யர்ப்பட
விள்ளிய வுளத்துணர் வினைமு டிக்குவான்.
 
"உள்ளிய அருள் நலம் ஒளித்துச் செய்குவான்
தெள்ளிய அமைதி ஈது என்று, தீ உளத்து
எள்ளிய அரசு செய் இகல் பெயர்ப் பட,
விள்ளிய உளத்து உணர்வினை முடிக்குவான்.

     "தான் செய்யக் கருதிய அருளாகிய நலத்தை மறைமுகமாகச்
செய்வதற்குத் தெளிவான சமயம் இதுவென்று கண்டு, தீய மனத்தால்
தன்னை இகழ்ந்த எரோது மன்னன் காட்டிய பகையின் பெயரால்
செல்வது போல் காட்டிக் கொண்டு, தன் விரிந்த உள்ளத்தில் உணர்ந்த
செயலை இச்சிறுவன் நிறைவேற்றுவான்.