|
| 86 |
தன்னுயிர்
காத்தன தன்மை தன்னிலும்
மன்னுயிர் காத்தருண் மலிபி ரான்றன
தின்னுயிர் காத்தென வொளித்தெ சித்துபோ
யன்னுயிர் காக்கவோ வயர்வுற் றானென்றான். |
| |
"தன் உயிர்
காத்தன தன்மை தன்னிலும்
மன் உயிர் காத்து அருள் மலி பிரான், தனது
இன் உயிர் காத்து என ஒளித்து எசித்து போய்,
அன்ன உயிர் காக்கவோ அயர்வு உற்றான்!" என்றான். |
"தன் உயிரைக்
காத்த தன்மை போன்ற செயலிடத்தும் மனித
உயிர்களையே காத்து அருள் பெருகி நிற்கும் ஆண்டவன், தனது இனிய
உயிரைக் காப்பது போல் ஒளித்து எசித்து சென்று, அங்குள்ள அந்த
உயிர்களைக் காக்கவென்றோ இத்துன்பத்திற்கு ஆளாயினான்!" என்று
சூசை வியந்தான்.
அன்ன+உயிர்
- அன்னவுயிர் என்பது, அன்னுயிர் எனத் தொகுத்தல்
விகாரமாயிற்று.
| 87 |
செவ்வுல கருட்படத்
தெரிந்த சூட்சிவா
னவ்வுல கினருணர்ந் தறிகு வாரலா
லிவ்வுல குணர்குவா ரெவர்கொ லென்றருட்
டுவ்வுல கிறைஞ்சடி தொழுது பாடினான். |
| |
"தெவ் உலகு அருட்
படத் தெரிந்த சூட்சி, வான்
அவ் உலகினர் உணர்ந்து அறிகுவார் அலால்,
இவ் உலகு உணர்குவார் எவர்கொல்?" என்று, அருள்
துவ்வு உலகு இறைஞ்சு அடி தொழுது, பாடினான். |
"பகை நாடு அருளை
அடைய ஆண்டவன் தெரிந்து கொண்டச்
சூழச்சியை அவ்வானுலகத்தவர் உணர்ந்து அறிந்து கொள்வாரே
அல்லாமல், இவ்வுலகில் உணரக் கூடியவர் எவரோ?" என்று சூசை கூறி,
இறைவன் அருளை உண்ணும் அறிவுலகம் வணங்கும் திருவடிகளைத்
தொழுது, பின்வருமாறு பாடினான் :
"எசித்து
நாடு மெய்க் கடவுளை வணங்காமையால், 'கடவுட்குப்
பகைவர் நாடு' என்றான்" என்பது பழையவுரை அடிக் குறிப்பு.
|