பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்75

     "சிறப்புப் பொருந்திய மணி வகையும், மூன்று வகையாய் நிறைந்து
கிடக்கும் பசுமையான பூக்களின் வகையும், பூமியில் நிறைந்துள்ள
பயிர்களின் வகையும், பழங்களும் இனிய தேனுமாகிய பல வகையும்,
அழகு நிறைந்த நிறங்களின் வகையும், இன்பம் தந்து நுகரப்படும்
இசைகளின் வகையுமாக, கடல் சூழ்ந்த இப் பூவுலகின் செல்வம்
வரையறுத்துச் சொல்லும் நிலையில் இல்லை.

     பூ முப்பால் : கோட்டுப் பூ, கொடிப் பூ, நீர்ப்பூ.

                   95
கூறுறநான் கூறுங்கால் கூற்றுங் குன்றக் குவிந்ததிரு
வேறுறவே றாய்ப்பரப்பி மண்மே னீர்மேல் விண்டிசைமேற்
பாறுறவாழ் புள்ளினமு நீர்வாழ் மீன்கட் பல்லினமு
மாறுறநீ ணிலத்துயிரு மெண்ணற் றீட்டி வகுத்தனனே.
 
"கூறு உற நான் கூறுங் கால் கூற்றுங் குன்ற, குவிந்த திரு
வேறு உற வேறாய்ப் பரப்பி, மண் மேல் நீர் மேல் விண் திசை
                                              மேல்
பாறு உற வாழ் புள் இனமும், நீர் வாழ் மீன்கள் பல் இனமும்,
மாறு உற நீள் நிலத்து உயிரும் எண் அற்று ஈட்டி வகுத்தனனே.

     "வகைப் படுத்தி நான் சொல்ல முற்படும் போது என் சொல்லும்
குறைபடுமாறு, குவிந்த செல்வங்களை வெவ்வேறு தன்மையோடு வெவ்வேறு
இடங்களில் பரப்பிய பின், மண்ணின் மேலும் நீரின் மேலும் ஆகாயத்
திடத்தும் சிறகு கொண்டு பறந்து வாழும் பறவை இனங்களும், நீரில் வாழும்
மீன்களின் பல இனங்களும், ஒன்றுக்கொன்று மாறு பட்டு நெடிய பூமியில்
வாழும் உயிரினங்களும் எண்ணுக்கு அடங்காமல் இவனே தொகுத்து
வகைப்படுத்தினான்.

                   96
மட்டற்ற புல்லுயிர்கட் கரச னாக வானவர்போற்
கட்டற்ற வேண்டுதல்வேண் டாமை வல்ல கருத்துயிரை
நட்டற்ற நிகர்கடந்த வுருவின் மாமை ஞாயில்பொறித்
திட்டற்ற மின்றிமனுக் குலத்தை யீன்றா னித்திறத்தான்.