பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்82

     "புதிதாகத் திருமணத்தால் இணைந்த அழகு முகக் கணவனும், ஒரே முகச் சாயல் கொண்ட தாயும், இறந்த தந்தையும், தம் செல்வத்திற்குத்
துணை நின்ற உடன் பிறந்தாரும், இனிய மக்களும், நீரினுள் அமிழ்ந்தி
இறந்து, நீரின் மேலே நெருக்கமாக மிதக்கக் காண்பர்.

     'காண்பர்' எனப் பொதுப்படக் கூறியதனை, கணவன்-மனைவி என்பது
போல் உறவு நோக்கி அமைத்துக் கொள்க.

               109
கண்டு கண் புதைக்குவார் கலங்கி யார்த்திட
ருண்டுகண் மழையொடு முமிழ்ந்து விம்முவார்
வண்டுகண் விசைவரும் வாரி மேட்டுமேற்
கொண்டுகண் டங்கணார் குழைந்த மிழ்ந்துவார்.
 
"கண்டு கண் புதைக்குவார்; கலங்கி ஆர்த்து, இடர்
உண்டு, கண் மழையொடும் உமிழ்ந்து விம்முவார்;
வண்டு கண் விசை வரும் வாரி மேட்டு மேல்
கொண்டு கண்டு, அங்கணார் குழைந்து அமிழ்ந்துவார்.

     "மேட்டுமேல் நின்று இவற்றைக் கண்டு சகியாமல் தம் கண்களைப்
பொத்திக் கொள்வர்; கலங்கி அலறி, துன்பத்தை உண்டு, கண்ணினின்று
பொழியும் மழையோடு அதனை உமிழ்ந்தாற்போல விம்முவர்; அம்பென்று
கருதத் தக்க விசையோடு வரும் வெள்ளம் அம்மேட்டின் மேல் பொங்கிக்
கொண்டு வரக் கண்டு, அங்கு நின்ற அவர்கள் தாமும் மனம் குழைந்து
நீரில் அமிழ்ந்தி மடிவர்.

                  அழிவின் அளவு

      - விளம், - மா, தேமா, - விளம், - மா, தேமா

                 110
"ஏரணி வலியின் னீதி யிறையவன் முனிந்த காலை
நீரணி யரண மாகா நெடுமதி ளரண மாகா
சீரணி யரண மாகா சேண்வரை யரண மாகா
பேரணி யரண மாகப் பெற்றநல் வினையி லார்க்கே.
 
"ஏர் அணி வலியின் நீதி இறையவன் முனிந்த காலை,
நீர் அணி அரணம் ஆகா; நெடு மதிள் அரணம் ஆகா;
சீர் அணி அரணம் ஆகா; சேண் வரை அரணம் ஆகா;
பேர் அணி அரணம் ஆகப் பெற்ற நல் வினை இலார்க்கே.