"ஆதியைப் பழித்த
காமத்து அசனி பட்டு எரிகின்றாரும்,
நீதியைப் பழிப்ப எள்ளி நீந்தி நைந்து அமிழ்ந்துவாரும்,
ஓதியைப் பழித்த பாவத்து உணவு இல சோர்கின்றாரும்,
சேதியைப் பழித்த மாடம் சிதைந்து வீழ்ந்து அழுங்கின்றாரும். |
"எல்லாவற்றிற்கும்
ஆதியாகிய ஆண்டவனைப் பழித்த தன்மையாய்க்
காமத்தில் மூழ்கியமையால் இப்பொழுது இடி விழுந்து எரிகின்றவரும்,
நீதியைப்பழித்த தன்மையாய் இகழ்ந்து வாழ்ந்து இப்பொழுது நீரில் நீந்தி
நைந்து அமிழ்ந்துகின்றவரும், ஞானத்தைப் பழித்துச் செய்த பாவத்தால்
இப்பொழுது உணவு கிட்டாமல் சோர்கின்றவரும், திருக்கோவிலை இகழ்ந்த
தன்மையாய் உயர்ந்து நின்ற மாளிகைகள் சிதைந்து வீழ்ந்து நசுங்குவாருமாக
எவரும் மாண்டனர்.
'எவரும் மாண்டனர்'
என்ற முடிக்குஞ் சொற்கள், அடுத்த பாடலில்
'எவரும் மாண்டு' என வரும் தொடரைக் கொண்டு கூட்டி விரித்ததாகக்
கொள்க. அழுங்கின்றார்-அழுங்குகின்றார் என்பதன் இடைக்குறை.
சேதி-சேதிமம் என்பதன் கடைக் குறை.
113 |
இடிமுகத் தூற்று
மாரி யிடைவிடா நாற்பா னாளும்
படிமுகத் தெழுந்த வாரி பருப்பதத் துயர்ந்த வெல்லா
முடிமுகத் தெழுந்து மூவைம் முழத்தெழீஇ யெவரு மாண்டு
மடிமுகத் தழிந்த ஞாலம் வயின்றொரு நீத்த வாரி. |
|
"இடி முகத்து ஊற்றும்
மாரி, இடைவிடா நால் பான் நாளும்,
படி முகத்து எழுந்த வாரி, பருப்பதத்து உயர்ந்த எல்லா
முடி முகத்து எழுந்து, மூ ஐம் முழத்து எழீஇ, எவரும் மாண்டு,
மடி முகத்து அழிந்த ஞாலம் வயின் தொறும் நீத்த வாரி. |
"நாற்பது நாளும்
இடைவிடாமல் இடியோடு கொட்டும் மழை
வந்து படிந்ததனால் எழுந்த வெள்ளம், மலைகளின் உயர்ந்த எல்லாச்
சிகரங்களுக்கும் மேலே உயர்ந்து, பதினைந்து முழம் எழுந்து
நின்றமையால் எல்லோரும் மடிந்து, சோர்ந்த முகத்தோடு அழிந்த
உலகத்தின் இடந்தோறும் ஒரே வெள்ளப்பெருக்காய் நின்றது.
|