பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்88

     "நூலாய் அமைந்த வேதத்தை வேலியாகக் கொண்டு
புலனடக்கத்தோடு கூடிய தவம் விளைவித்த ஒழுக்கத்தின் நிறைவால் வரும்
மாட்சி கொண்ட நோவன் என்பவனும், தான் தவத்தால் பெற்றெடுத்த
மக்களாய்த் தூய்மை பொருந்திய சேம் காம் யாப்பன் என்னும் மூவருமாக
இந்நால்வரும், இந் நால்வரின் மனைவியர் நால்வருமே அன்று இறவாதவர்
ஆவார்.

                  119
எண்மரு மிறைவ னூலா லியைந்தநவ் வேறி மீண்டு
மண்மரு வினங்கள் விண்மேல் மருவினம் விடாமை யேற்றி
விண்மரு வமலன் றானே விரும்பிமீ காம னாய்ப்பார்க்
கண்மரு வளவில் வாரி கடந்துமேன் மிதந்து நின்றார்.
 
"எண்மரும், இறைவன் நூலால் இயைந்த நவ்வு ஏறி, மீண்டும்
மண் மருவு இனங்கள் விண்மேல் மருவு இனம் விடாமை ஏற்றி,
விண் மருவு அமலன் தானே விரும்பி மீகாமன் ஆய் பார்க்
கண் மருவு அளவு இல் வாரி கடந்து மேல் மிதந்து நின்றார்.

     "மேலே கூறிய எட்டுப் பேரும், ஆண்டவன் எண்ணப்படி இயைந்து
செய்த மரக்கலத்தில் ஏறி, மேலும் மண்ணில் நடமாடும் உயிரினங்கள்
வானத்தில் பறக்கும் உயிரினங்கள் ஆணும் பெண்ணுமாக ஓர் இனமும்
விட்டுப் போகாமல் அதனில் ஏற்றிக்கொண்டு, விண்ணுலகில் வாழும்
ஆண்டவன்தானே கப்பலோட்டியாய் விரும்பி அமையக்கொண்டு, உலகில்
அப்பொழுது நிலவிய அளவில்லாத வெள்ளப் பெருக்கைத் தாண்டி மேலே
மிதந்து நின்றனர்.

                 120
அணிவள ராருமேனி யாகிய நாட்டி லங்கண்
மணிவளர் குன்றத் துச்சி வதிந்தபா றிழிந்த வேலை
பிணிவள ரின்ன தன்மை பினர்ப்பெயா தாணை யாகப்
பணிவளர் வான்வில் பெய்காற் பரப்புவ லென்றா னாதன்.
 
"அணி வளர் ஆருமேனி ஆகிய நாட்டில் அங்கண்
மணி வளர் குன்றத்து உச்சி வதிந்த பாறு இழிந்த வேலை,
'பிணி வளர் இன்ன தன்மை பினர்ப்பெயாது ஆணையாக,
பணி வளர் வான் வில், பெய்கால், பரப்புவல்' என்றான் நாதன்.