பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்90

     பெய்து வைத்த அமுதத்தைப் பொற்கலத்தில் ஏந்தித் தந்தது
போல, வானவனாகிய கபிரியேல் தன் சொல்லாகிய பாத்திரத்தில் ஏந்தித்
தந்த இந்த வரலாற்றைச் செவியால் உண்ட அவ்விருவரும், தன்தன்
உள்ளம் என்னும் பாத்திரத்தில் ஏந்தும் இன்பத்தின் மிகுதியால், தாயாகிய
மரியாள் தன் கையில் ஒளியுள்ள பாத்திரம் போல் ஏந்திக் கொண்டிருந்த
தெய்வ மகனைப் பின்வருமாறு தொழுது பாடினாள்.

                   மரியாள் தொழுகைப் பாடல்

      கருவிளம், கருவிளம், கருவிளம், கருவிளம்.

            123
மருடரு மறுவற மழைதரு மடிவற
வருடரு குருதியி னடைமழை தருகுவை
யருடரு குருதியி னடைமழை தருகுநின்
சுருடரு மதுமல ரிணையடி தொழுதும்.
 
"மருள் தரு மறு அற, மழை தரு மடிவு அற,
அருள் தரு குருதியின் அடை மழை தருகுவை!
அருள் தரு குருதியின் அடை மழை தருகும் நின்
சுருள் தரு மது மலர் இணை அடி தொழுதும்.

     "மயக்கத்தால் விளையும் பாவங்கள் நீங்குமாறும், முன் போல்
மழையால் விளையும் கேடுகள் நீங்குமாறும், அருளை விளைவிக்கும் உன்
குருதியாகிய அடை மழையைப் பொழியுமாறு அவதரித்து வந்த பாலனே!
அருளை விளைவிக்கும் உன் குருதியாகிய அடை மழையைப் பொழிந்து
உதவும், இதழ்ச் சுருளிடையே விளையும் தேனைக் கொண்டுள்ள தாமரை
மலர் போன்ற உன் இரண்டு அடிகளையும் அது பற்றித் தொழுவோம்.

     இப்பகுதியில் வரும் மூன்று பாடல்களிலும் மூன்றாமடி
இடைமடக்காகவும், நான்கா மடியின் இறுதிச் சீர் புளிமாவாகவும் வருதல்
காண்க. தருகுவை - 'தரும் நீ' என்ற பொருளில் முன்னிலைப் பெயராய்
நின்று இயல்பு விளி கொண்டது. தொடர்ந்து வரும் இரு பாடல்களிலும்
இதுபோலவே கொள்க.