பக்கம் எண் :

இரண்டாம் காண்டம்91

            124
சினவழி தெரிகில தயைவழி தெரிகில
மனவழி யடைகில மரபுயர் கடவுளை
மனவழி யடைகில மரபுயர் கடவுணின்
றனவழி யொளிரரு டருமடி தொழுதும்.
 
"சின வழி தெரிகு இல, தயை வழி தெரிகு இல,
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுளை!
மன வழி அடைகு இல மரபு உயர் கடவுள் நின்
தன வழி ஒளிர் அருள் தரும் அடி தொழுதும்.

     "உன் சினம் வரும் வழியை மனிதர் தெரிய இயலாதவாறும், தயவு
வரும் வழியைத் தெரிய இயலாதவாறும், மனத்தின் வழியாகவும் அடைய
இயலாதவாறும் முறைமையால் உயர்ந்த கடவுளாகிய பாலனே! மனத்தின்
வழியாகவும் அடைய இயலாதவாறு முறைமையால் உயர்ந்த கடவுளாகிய
உன் பொன் போல் ஒளிர்ந்து அருள் தரும் அடிகளை யாம் தொழுவோம்.

            125
மெலியுல கழிவுற வெருவிட வெகுளினை
மலியுல குயிருற மகவுரு வடிவனை
மலியுல குயிருற மகவுரு வடிவநின்
வலியுல குணர்வுற மலரடி தொழுதும்.
 
"மெலி உலகு அழிவு உற, வெரு இட வெகுளினை.
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவனை!
மலி உலகு உயிர் உற மகவு உரு வடிவ நின்
வலி உலகு உணர்வு உற மலர் அடி தொழுதும்."

     "பாவத்தால் மெலிந்த அக்கால உலகம் அழியுமாறும், பாவிகளுக்கு
அச்சம் விளைவிக்குமாறும் வெகுண்டவனே, இக் காலத்தோ, மக்கள்
மலிந்த இவ்வுலகம் உயிர் பெறுமாறு குழந்தை உருவமாக மனித வடிவம்
கொண்டு வந்த பாலனே! மக்கள் மலிந்த இவ்வுலகம் உயிர் பெறுமாறு
குழந்தை உருவமாக மனித வடிவம் கொண்டு வந்தவனே, உன்
வல்லமையை உலகம் உணர்ந்து உய்யுமாறு, உன் மலர் போன்ற அடியை
யாம் தொழுது வேண்டுவோம்."