பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 101

      துன்ப வேளையில் உரிய கணவனின் துணை இல்லாமலும்
எலிசபெத்தை ஒப்பிடற்கரிய துணிச்சல் மேற்கொண்டாள். மழை
மேகத்திடையே தோன்றும் மின்னலின் விரைவு போல் அழியக் கூடிய தன்
பொருள்களையெல்லாம் இரப்போர்க்கு ஈந்தாள் அழகிய முகமுள்ள தன்
மகனைக் கையில் எடுத்துக் கொண்டாள். அரிய தவத்தைக் கருதி, நீர்
வளம் மிக்க நாட்டுப் பகுதியை விட்டகன்று, காட்டில் ஒளிந்து கொள்ள
நினைந்து சென்றாள்.

 
                              59
அன்பு மச்சமுங் காட்டிய வழிதொடர்ந் தகல
முன்பு காவிடர் முயன்றநீ ணெறிகளைக் கடந்து
துன்பு மல்லுமுட் குடியலான் மன்னுயிர் தொடரா
வின்பு குத்ததோ ரிருண்டகா னிடையொளித் துறைந்தாள்.
 
அன்பும் அச்சமும் காட்டிய வழி தொடர்ந்து அகல,
முன் புகா இடர் முயன்ற நீள் நெறிகளைக் கடந்து,
துன்பும் அல்லும் உட் குடி அலால், மன்னுயிர் தொடரா
இன்பு உகுத்தது ஓர் இருண்ட கானிடை ஒளித்து உறைந்தாள்.

      மகன்பால் அன்பும் மன்னன்பால் அச்சமும் தனக்குத் தக்கதென்று
காட்டிய வழியைத் தொடர்ந்து அகன்றாள். முன் புகுந்து அறியாததும்
தொல்லையோடு முயன்று செல்லக் கூடியதுமான நீண்ட வழிகளைக் கடத்து
சென்றாள். துன்பமும் இருளுமே உள்ளே வாழும் குடிகளல்லாமல், மனித
உயிர்கள் செல்லுதலே இல்லாத தாய், தன் கருத்துக்கேற்ப இன்பம்
சொரிவதான ஒரு காட்டில் ஒளிந்துத் தங்கினாள்.


     
எவரும் வராத இடமாதலின் தனக்கு இன்பம் சொரிவதாயிற்று.

 
                    60
தெண்ணஞ் சூழியிற் செவ்விதழ்த் தாமரைப் பள்ளி
வண்ணம் பார்ப்பொடு மகிழ்வெழத் துஞ்சிய வன்ன
மெண்ணந் தூவிய வேடனுக் கஞ்சிவந் தெரிகான்
கண்ணம் பார்ப்பொடு கலுழ்ந்தென மகவொடு கலுழ்வாள்.
 
தெண் அம் சூழியில் செவ்விதழ்த் தாமரைப் பள்ளி
வண்ணம் பார்ப்பொடு மகிழ்வு எழத் துஞ்சிய அன்னம்
எண்ணம் தூவிய வேடனுக்கு அஞ்சிவந்து, எரிகான்
கண் அம் பார்ப்பொடு கலுழ்ந்தென, மகவொடு கலுழ்வாள்.