பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 102

      தெளிந்த நீருள்ள அழகிய தடாகத்தில் செந்நிற இதழுள்ள தாமரை
மலராகிய படுக்கையில் அழகிய தன் குஞ்சோடு மகிழ்ச்சி பொங்கத்தூங்கிக்
கொண்டிருந்த ஓர் அன்னம் கொலை எண்ணத்தைத் தன் நிலையால்
புலப்படுத்திய வேடனுக்கு அஞ்சி அதனை விட்டு வந்து, வெயில் எரியும்
பாலைவனத்தில் அழகிய குஞ்சோடு இருந்து அழுவது போல்,
எலிசபெத்தையும் தன் மகனோடு இருந்து அழுவாள்.

 
                            61
மெழுகி னால்வனை பாவைதீ வெம்மைபட் டுருகி
யொழுகி னாலென வுளமெலிந் தருந்துயர்க் கடலின்
முழுகி னாலென மொய்யறா நெஞ்சினாள் முரலுங்
கழுகி னாலிமிர் கானிடை யுடறளர்ந் திருந்தாள்.
 
மெழுகினால் வனைபாவை தீ வெம்மை பட்டு உருகி
ஒழுகினால் என உளம் மெலிந்து, அருந் துயர்க் கடலில்
முழுகினால் என மொய் அறா நெஞ்சினாள், முரலும்
கழுகினால் இமிர் கானிடை உடல் தளர்ந்து இருந்தாள்.

      மெழுகினால் செய்த பாவை தீயின் வெப்பம்பட்டு உருகி வழிவது
போல் உள்ளம் மெலிந்து, அரிய துயர்க் கடலில் முழுகினாற் போலப்
போராட்டம் அறாத நெஞ்சினை உடையவளாய், ஒலிக்கும் கழுகினால்
எதிரொலி எழும் அக்காட்டில் உடல் தளர்ந்து இருந்தாள்.

      போராட்டம் : காட்டிற்கு வந்தது சரியோ தவறோவென்ற மனப்
போராட்டம்.

 
                            62
இருந்த காலையில் வானவ ரிசைத்தலாற் றானுள்
வருந்த வேந்தெலா மகரையுந் துமித்தன னெனக்கேட்
டருந்த யாபரன் றன்மக வளித்தலாற் புகழைத்
திருந்த நீடுநாள் வாழ்த்திசைத் துறுதியிற் சிறந்தாள்.
 
இருந்த காலையில் வானவர் இசைத்தலால் தான் உள்
வருந்த வேந்து எலா மகரையும் துமித்தனன் எனக்கேட்டு,
அருந் தயாபரன் தன் மகவு அளித்தலால், புகழைத்
திருந்த நீடு நாள் வாழ்த்து இசைத்து உறுதியிற் சிறந்தாள்.