பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 114

     அவ்வானவர் அவ்விருவர் கண்களும் கனிவோடு கண்டு களிக்குமாறு
தம் உருவத்தைக் காட்டினர்; யாழ்போல் கனிவான இராகத்தைக் கொண்டு
பாடினர்; புண்ணுக்குக் கனிவான மருந்து போலப் பொங்கிய அருளோடு
விண்ணுலகினின்று கனிந்த உறுதி மொழிகளைக் கூறினர்.

 
             84
பெறுதி யாகம றாப்பெரி தன்பினா
ளுறுதி யாகவன் றேவிய வும்பர்க்கேட்
டிறுதி யாகநின் றேங்குயிர் தேறியுட்
குறுகிய யாகம வாயொடு கூறுவாள்.
 
பெறுதி ஆகம் அறப் பெரிது அன்பினாள்
உறுதி ஆக அன்று ஏவிய உம்பர்க் கேட்டு.
இறுதி ஆக நின்று ஏங்கு உயிர் தேறி, உள்
குறுகி ஆகம வாயொடு கூறுவாள்:

     பெற்றதொன்றை நெஞ்சில் நீங்காது வைத்துப் போற்றும் பேரன்பு
கொண்ட மரியாள் எலிசபெத்தைக்கு உறுதி ஏற்படுமாறு அன்று ஏவிய
வானவர் கூறியதை அவள் கேட்டு, முடிவை நெருங்கி நின்று ஏங்கிய உயிர்
தேறி, உள்ளம் பணிவால் குறுக வேதநூல் பயின்ற வாயினால் பின்வருமாறு கூறுவாள்:

     பெற்ற தொன்று : முன் சந்திப்பின்போது எலிசபெத்தை காட்டிய அன்பு. ஆகமம் - நூல். இங்கு வேத நூலைக் குறித்தது. பெறுதி -
தொழிலாகு பெயராக வந்தது.

 
              85
அன்னை யேவிய வண்ணல ரேயினி
தென்னை யாண்டகை தன்பதத் தேவிய
பின்னை பேர்கில பெற்றியோ டென்மகன்
றன்னை யோம்பிடத் தந்தையுந் தாயுநீர்.
 
''அன்னை ஏவிய அண்ணலரே, இனிது
என்னை ஆண்டகை தன் பதத்து ஏவிய
பின்னை, பேர்கில பெற்றியோடு என் மகன்
தன்னை ஓம்பிடத் தந்தையும் தாயும் நீர்''