பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 115

     ''அன்னையாகிய மரியாள் ஏவிவிட்ட பெரியோரே, நீர் இனிதாக
என்னை ஆண்டவன் அடிக்கு ஏவிவிட்ட பின்னும், நீங்காத தன்மையோடு
என் மகனைப் பேணும் பொருட்டு அவனுக்குத் தந்தையும் தாயுமாக இங்கு
இருப்பீர்''

 
             86
என்றி ரங்கியி ரங்கிய சேயின்மே
னின்றி ரங்குகண் ணீரொடு மாசிதந்
தன்றி லங்கிய வங்கொடி வீழ்ந்தெனப்
பொன்றி லங்கிய பூட்சிவி ழுந்ததே.
 
என்று இரங்கி, இரங்கிய சேயின்மேல்
நின்று இரங்கு கண் நீரோடும் ஆசி தந்து,
அன்று இலங்கிய அம் கொடி வீழ்ந்தெனப்
பொன்ற இலங்கிய பூட்சி விழுந்தது.

     என்று மேலே காட்டியவாறு எலிசபெத்தை இரங்கி, வருந்தி நின்ற
மகன்மேல் பதிய நின்று வருந்திய தன் கண் பொழிந்த நீரோடும்
அவனுக்கு ஆசி தந்தாள். தரவே, அழகுடன் விளங்கிய கொடி வீழ்ந்தாற்
போல, இறக்கவும், அழகுடன் விளங்கிய உடல் அன்றுதானே மடிந்து
விழுந்தது.

     பொன்ற + இலங்கிய = 'பொன்றவிலங்கிய' என வரவேண்டியது
'பொன்றிலங்கிய' எனத் தொகுத்தல் விகாரமாய் நின்றது. பூட்சி விழுந்தது;
பொன்றிய பின்னரும் இலங்கியது என்று கொள்க.

                   கருணையன் துயரம்

 
                87
வீழ்ந்த கொம்பொடு சேர்கொடி வீழ்ந்தென
மாழ்ந்த தாயொடு மாழ்ந்தென வீழ்ந்தசே
யாழ்ந்த துன்புளத் தாற்றில னொற்றைவாள்
போழ்ந்த வீருயிர் போற்கிடந் தானரோ.
 

வீழ்ந்த கொம்பொடு சேர்கொடி வீழ்ந்தென,
மாழ்ந்த தாயொடு மாழ்ந்தென வீழ்ந்த சேய்
ஆழ்ந்த துன்பு உளத்து ஆற்றிலன்; ஒற்றை வாள்
போழ்ந்த ஈர் உயிர் போல் கிடந்தான் அரோ.