பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 121

தவத்தின் மாட்சியைத் தூய தன்மையாய்க் கடைப்பிடிக்க விரும்பினான்.
அதற்கும் தன்பால் துணை இல்லையேயென்று அஞ்சி ஏங்கினான். தீப்பட்ட
தன்மையாய் எரியும் தன் நெஞ்சைப் போன்று அலைவீசுகின்ற ஒரு தடாகப்
பக்கம் தனித்துச் சென்றான்.

     'தனித்துச் சென்றான்' எனவே, அடக்கம் முடிந்ததும் வானவர்
மறைந்தது பெறப்படும்.

 
           96
எழுஞ்சுனை யகட்டுப் பாய்நீ
     ரினிதிவற் கிரங்கி விம்மக்
கொழுஞ்சுனை கண்க ளாய
     குவளைக ளிமையா நோக்கக்
கெழுஞ்சுனை வரம்பில் வைகிக்
     கிளைத்தநோ யழன்ற நெஞ்சா
னழுஞ்சுனை பெருகக் கண்ணீ
     ரகல்கடல் வெள்ள மாற்றா.
 
எழும் சுனை அகட்டுப் பாய் நீர் இனிது இவற்கு இரங்கி விம்ம,
கொழுஞ் சுனை கண்கள் ஆய குவளைகள் இமையா நோக்க,
கெழுஞ் சுனை வரம்பில் வைகி, கிளைத்த நோய் அழன்ற நெஞ்சான்
அழும் சுனை பெருகக் கண்ணீர் அகல் கடல் வெள்ளம் ஆற்றா.

     அலை எழுகின்ற தடாகத்தின் உள்ளிடத்து வந்து பாயும் ஆற்று நீர்
பொருத்தமாக இவனுக்கு இரங்கி விம்முவதுபோல் இருந்தது. கொழுமையான
தடாகம் தன் கண்களாகிய குவளை மலர்களால் இமை கொட்டாமல்
இவனையே பார்ப்பதுபோல் இருந்தது. பல வகையாகக் கிளைத்து எழுந்த
துன்ப நினைவுகளால் எரிந்த மனத்தை உடைய கருணையன் செடிகளாற்
செறிந்த அத்தடாகத்தின் கரையில் தங்கி, அத்தடாகம் பெருகுமாறு அழும்
கண்ணீருக்கு அகலமான கடல் வெள்ளமும் ஒப்பாகாது.

     'சுனை பெருக அழும் கண்ணீர்' என மாற்றுக. 'ஆற்றாது' என்பது
செய்யுள் ஓசைப் பொருட்டு ஈறு குறைந்து நின்றது.