பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 123

சொல்லிய இசையின் பெட்போ, துயரமோ, வியப்போ, யாதோ?
புல்லிய கொம்பில் புள்ளும், பூவில் வண்டு இனமும், காற்றும்
இல்லிய புனலும், மற்ற யாவும் வாய் விடாமை கேட்ப,
கல்லிய கவிர்ச் செவ் வாயான் கருதிய துயரம் கான்றான்:


     அவ்வாறு கருணையன் சொல்லிய இசை போன்ற ஒலியின்மீது
கொண்ட விருப்பமோ, சொல்லின் பொருள் உணர்ந்து கொண்ட துயரமோ,
அதன் கருத்துச் சிறப்பைக் கண்டு கொண்ட வியப்போ, வேறு யாது
காரணமோ? மரக் கொம்புகளிற் பொருந்திய பறவைகளும், பூவில் நின்ற
வண்டுக் கூட்டமும், காற்றும், பாய்ந்த நீரும், மற்ற யாவும் வாய் திறவாமல்
கேட்டுக் கொண்டிருந்தன. அவ்வாறு பேசிய தேன் கொண்ட முள் முருக்கம்
பூவைப்போற் சிவந்த வாயையுடைய கருணையன் தான் கருதிய துயரத்தைப்
பின் வருமாறு கக்கினான்:

 
         99
நீரெழுங் குமிழி போலு
     நெடியதேர் நேமி போலுங்
காரெழு மின்னற் போலுங்
     கடலெழுந் திரைகட் போலும்
பாரெழுஞ் செல்வத் தில்லைப்
     பதியுமோ நிலையு மென்றார்
சீரெழு ஞானத் திற்குந்
     திரைதிரண் டலைவ துண்டோ.
 
'நீர் எழும் குமிழி போலும், நெடிய தேர் நேமி போலும்,
கார் எழு மின்னல் போலும், கடல் எழும் திரைகள் போலும்,
பார் எழும் செல்வத்து இல்லை பதியுமோ நிலையும்' என்றார்;
சீர் எழு ஞானத்திற்கும் திரை திரண்டு அலைவது உண்டோ?

     ''பெரியோர், 'நீரிலே எழும் குமிழியைப் போலவும், உயர்ந்த தேரின்
சக்கரம் போலவும், கார் மேகத்தில் தோன்றும் மின்னல் போலவும், கடலில்
எழும் திரைகள் போலவும் இவ்வுலகத்தில் உண்டாகும் செல்வத்திற்குப்
பதிவான இடமும் நிலையான தன்மையும் இல்லை'' என்று கூறியுள்ளனர்.
திரைபோல் திரண்டு பின் அலைபோல் அலைவது சிறப்புப் பொருந்திய
ஞானத்திற்கும் உண்டோ?