பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 124

     பொருட் செல்வத்திற்குக் கூறிய நிலையாமை அருட் செல்வத்திற்குப்
பொருந்தாதென்பது கருத்து. தாயைப் பிரிந்த தன்மையால் ஞானமும்
தன்னை விட்டுப் பிரிந்தது போன்ற ஓர் உணர்வால் கருணையன்
திணறுகிறான்.

 
           100
வெண்ணிறத் துகில்கொள் மாசு
     வெண்மதி கதிருள் தோய்த்துத்
தெண்ணிறத் தொழிக்கல் போற்சூற்
     சிறையகன் றுதிக்கு முன்னர்
தண்ணிறப் பிறைசூழ் தாளாள்
     தளிர்த்ததன் றயையிற் சொன்ன
பண்ணிறக் கிளவி யால்யான்
     பழம்பழிக் களங்கம் தீர்ந்தேன்.
 
''வெண் நிறத் துகில் கொள் மாசு வெண் மதி கதிருள் தோய்த்துத்
தெள் நிறத்து ஒழிக்கல் போல், சூல் சிறை அகன்று உதிக்கும் முன்னர்,
தண் நிறப் பிறை சூழ் தாளாள் தளிர்த்த தன் தயையின் சொன்ன
பண் நிறக் கிளவியால், யான் பழம் பழிக் களங்கம் தீர்ந்தேன்.

     ''வெண்ணிற ஆடையில் படிந்த அழுக்கினை, வெண்ணிற மதியின்
கதிர்களுக்குள் தோய்த்தெடுத்துத் தெளிந்த நிறத்தால் போக்குதல் போல்,
கருப்பமாகிய சிறையை விட்டு நீங்கிப் பிறக்குமுன், குளிர்ந்த
தன்மையுள்ள பிறை சூழ்ந்த அடியை உடைய மரியாள் தன்னிடம்
தோன்றிய தயவினால் சொன்ன இசை போன்ற இனிய சொல்லால்,
நான் ஆதிப்பெற்றோரால் தொடர்ந்து வருகின்ற பழமையான பாவத்தின்
கறை நீங்கப் பெற்றேன்.

     இது முதல் 103-ம் பாடல் வரையுள்ள செய்திகள் பற்றிய விவரம்
முன் பாடல் 27 - 32 நோக்குக.