பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 128

காட்டிடை யிருந்த தன்மை
     காண்கிலன் வைய நீங்கி
வீட்டிடை யுவந்த தன்மை
     விருப்பெழ வளர்ந்தே னன்றோ.
 
''நீட்டு இடை நெறிகள் நீக்கி நீரிடை மலர்ந்த கஞ்சத்து
ஏட்டிடை அன்னம் அன்ன, ஈன்றனள் கரத்தில் வைகி,
காட்டிடை இருந்த தன்மை காண்கிலன், வையம் நீங்கி
வீட்டிடை உவந்த தன்மை விருப்பு எழ வளர்ந்தேன் அன்றோ?

     ''இடையே கிடந்த நீண்ட வழிகளையெல்லாம் கடந்து நீரில் மலர்ந்த
தாமரை இதழின் நடுவே அமர்ந்த அன்னம் போல, என்னைப் பெற்றவள்
கையில் நான் தங்கியிருந்தேன். அதனால், காட்டிலே இருந்த தன்மையை
உணராதவனாய், இமமண்ணுலகை நீங்கி வான் வீட்டில் மகிழ்ந்திருந்த
தன்மையாய், விருப்பம் மேலோங்க வளர்ந்தேன்.

     'அன்றோ' என்றது அசைநிலை.

 
         106
வாய்மணி யாகக் கூறும்
     வாய்மையே மழைநீ ராகித்
தாய்மணி யாக மார்பிற்
     றயங்கியுட் குளிர வாழ்ந்தேன்
றூய்மணி யாகத் தூவுந்
     துளியில திளங்கூழ் வாடிக்
காய்மணி யாகு முன்னர்க்
     காய்ந்தெனக் காய்ந்தே னந்தோ.
 
''வாய் மணியாகக் கூறும் வாய்மையே மழை நீராகி,
தாய் மணி ஆக மார்பில் தயங்கி உள் குளிர வாழ்ந்தேன்.
தூய் மணியாகத் தூவும் துளி இலது இளங் கூழ் வாடிக்
காய் மணி ஆகும் முன்னர்க் காய்ந்து எனக் காய்ந்தேன், அந்தோ!

     ''என் தாயின் வாய் மணி போலக் கூறும் மெய்யுணர்வுகளையே மழை
நீராகக் கொண்டு பருகி, அந்தத் தாயின் மார்பில் மணியாக விளங்கி, மனம்
குளிர வாழ்ந்தேன். ஐயோ! தூய மணி போலத் தூவும் மழைத்துளி இல்லாது
இளம் பயிர் வாடி, முதிர்ந்து காய்ந்த கதிர்மணி ஆகுமுன் காய்ந்த
தன்மையாய் நானும் இப்பொழுது அவளை இழந்து காய்ந்தேன்.