பக்கம் எண் :

மூன்றாம் காண்டம் 130

''துள்ளி வாழ் உழைகாள், கொம்பில் துன்னி வாழ் குயில்காள்,
                                                 தூய்தேன்
அள்ளி வாழ் அளிகாள், தேன்காள், அழ நிறக் கமலப் பைம் பூம்
பள்ளி வாழ் ஓதிமங்காள், பறித்து வாழ் கொடிகாள், கோறல்
உள்ளி வாழ் வரிகாள், சொன்மின்; உயிர் தனித்தலின் தீது உண்டோ?


     ''துள்ளி வாழும் மான்களே, கொம்பில் நெருங்கி வாழும் குயில்களே,
தூய தேனை அள்ளி உண்டு வாழும் வண்டுகளே தேனீக்களே, நெருப்பு
நிறமுள்ள தாமரையின் மெல்லிய பூவாகிய படுக்கையில் வாழும்
அன்னங்களே, திருடி வாழும் காகங்களே, கொன்று தின்னுதலைக் கருதி
வாழும் புலிகளே, சொல்லுங்கள் உயிர்ப்பொருள் ஒன்று தனித்திருப்பது
போல் தீயது வேறொன்று உண்டோ?

 
                    109
உய்முறை யறியே னோர்ந்த
     வுணர்வினொத் துறுப்பு மில்லா
மெய்முறை யறியேன் மெய்தான்
     விரும்பிய வுணவு நேடச்
செய்முறை யறியேன் கானிற்
     செவ்வழி யறியேன் றாய்தன்
கைமுறை யறிந்தேன் றாயுங்
     கடிந்தெனைத் தனித்துப் போனாள்.
 
''உய் முறை அறியேன். ஓர்ந்த உணர்வின் ஒத்து உறுப்பும் இல்லா
மெய்முறை அறியேன். மெய்தான் விரும்பிய உணவு தேடச்
செய்முறை அறியேன். கானில் செல் வழி அறியேன். தாய் தன்
கைமுறை அறிந்தேன். தாயும் கடிந்து எனைத் தனித்துப் போனாள்.

     ''பிழைக்கும் வழியை அறியேன். ஆராய்ந்து கண்ட உணர்வினுக்கு
ஒத்த வண்ணம் உறுப்புக்கள் இயங்குதல் இல்லாத இவ்வுடலின் போக்கையும்
அறியேன். உடம்புதான் விரும்பிய உணவைத் தேடிக் கொடுக்கச் செய்ய